தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார் சம்பந்தன் -சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கவசத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்ததன் ஈடுபட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கடும்தொனியில் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
கடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் வாக்களித்தார்களே தவிர, தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்துவதற்காக அல்ல எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழரசுக் கட்சியின் கிளைகளைத் திறப்பதன் மூலமாக கூட்டமைப்பைப் பலப்படுத்தப் போவதாக சம்பந்தன் தெரிவித்திருப்பது கூட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்தும் ஒரு செயலாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் புதிய கிளை ஒன்றை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் கிளைகளை நிறுவுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கே எனத் தெரிவித்திருந்தார். இது நியாயப்படுத்த முடியாத தமிழிர்களை ஏமாற்றும் ஒரு முயற்சி எனக் குறிப்பிடும் சிவசக்தி ஆனந்தன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு இன்று பத்து வருடங்களுக்கு மேல் சென்றுவிட்டபோதிலும் அதனைப் பதிவு செய்ய வேண்டும், அதற்கான கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும் என்பதில் தமிழரசுக் கட்சியினர் ஒருபோதுமே அக்கறை காட்டியதில்லை. இன்று தமிழர்களின் பிரதான கட்சியாக - சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பாக கூட்டமைப்பு இருக்கின்றபோதிலும், அது பதிவு செய்யடவோ அல்லது உரிய கட்டமைப்புக்களைக் கொண்ட ஒரு கட்சியாகவோ இல்லை.
தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கும் சர்வதேசத்தின் முன்பாகக் காட்டிக்கொள்வதற்கும் மட்டும்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேவையாகவுள்ளது. ஆனால், கூட்டமைப்பு என்ற கவசத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமிழரசுக் கட்சியை வளர்ப்பதுதான் சம்பந்தனினதும், தமிழரசுக் கட்சியினதும் நோக்கமாக இருந்துள்ளது. இதனால்தான், மக்கள் சக்தியுடன் கூடிய ஒரு அமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்டியெழுப்ப அவர்கள் முன்வரவில்லை.
1976 இல் பிரதான தமிழ்க் கட்சிகள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிய போது அதற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்ற தந்தை செல்வா நடந்துகொண்ட முறையை சம்பந்தன் கவனிக்க வேண்டும். தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர் அதற்கான கிளைகள்தான் அமைக்கப்பட்டனவே தவிர, தமிழரசுக் கட்சியின் கிளைகளை அமைக்க வேண்டும், தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதில் தந்தை செல்வா அக்கறை காட்டவில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பலப்படுத்துவதிலேயே அவர் அக்கறை காட்டினார்.
ஆனால், தந்தை செல்வாவின் பாதையில் செல்வதாகக் கூறிக்கொள்ளும் சம்பந்தன் ஐயா ஐந்து அமைப்புக்கள் இணைந்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி கிளைகளை அமைப்பதும் அங்கத்தவர்களைச் சேர்பதும் கூட்டமைப்பைப் பலப்படுத்தத்தான் எனக் கூறுவது யாரை ஏமாற்றுவதற்கு? இதேபோல கூட்டமைப்பிலுள்ள ஒவ்வொரு கட்சியும் செயற்பட முற்பட்டால் கூட்டமைப்புக்குள் ஐக்கியத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதற்கு சம்பந்தன் ஐயாதான் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறான ஒரு நிலை உருவானால் குழு மோதல்களும், குழு வாதங்களும்தான் மேலோங்குமே தவிர, தமிழர்களுடைய நலன்களுக்கான ஐக்கியப்பட்ட ஒரு வேலைத் திட்டத்தை முன்னெடுக்க முடியாது என்பதே எமது கருத்தாகும்.
ஒவ்வொரு கட்சியும் தமது சுய அடையாளங்களைக் களைந்துவிட்டு, பொதுவான அடையாளத்தில் இணைவதன் மூலமே உண்மையான ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும். இதற்கான மத்தியஸ்த்த முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தாம் தயார் என தமிழ் சிவில் சமூகத்தினர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்கள். இதனைத் தட்டிக்கழிக்கும் வகையில் தமிழரசுக் கட்சியினர் செயற்படுவதன் மர்மம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல.
30 வருடகாலப் போரினால் நொந்துபோய், அரசின் ஆக்கிரமிப்புக்குள் என்ன செய்வது எனத் தெரியாது நம்பிக்கையிழந்தவர்களாகவுள்ள தமிழர்களுக்கு எந்த வகையிலும் நம்பிக்கையைக் கொடுப்பதாக சம்பந்தன் ஐயாவின் இந்த அறிவிப்பு இல்லை என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இந்தக் கட்டத்திலாவது மக்களுக்கு கொஞ்சமாவது நம்பிக்கைக் கொடுக்கும் வகையில் செயற்படுவதற்கு சம்பந்தன் ஐயா முற்பட்டால், நேரடியாகவே கூட்டமைப்பப் பலப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.
தமிழரசுக் கட்சிக் கிளைகளை அமைப்பதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்துகின்றோம் எனக் கூறி இனியும் மக்களை ஏமாற்ற வேண்டாம் என சம்பந்தனைத் தயவாகக் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு சிவசக்தி ஆனந்தன் தெரிவித்திருக்கின்றார்.
0 comments
Write Down Your Responses