விஸ்வரூபம் பட எதிர்ப்பும் சகவாழ்வுக்கான சகிப்புத் தன்மையும் - ரா.ப.அரூஸ்

அண்மைய நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்படுகின்ற விடயங்களில் இந்தியத் திரைப்பட நடிகர் கமல் ஹாசன் அவர்கள் எழுதி, இயக்கி, நடித்த ‘’விஸ்வரூபம்” எனும் திரைப்படம் வெளியிடப்படுவதில் இஸ்லாமியர்கள் காட்டுகின்ற எதிர்ப்பு தொடர்பான விடயமும் ஒன்றாகும்.

தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அந்தத் திரைப்படம் வெளியிடத் தடை விதிக்குமாறு கோரியதை அடுத்து தமிழக அரசு தடை விதித்தமை, இந்தத் திரைப்படத்தை பெரும்பாலான இஸ்லாமியர் விரும்புகிறார்கள் என கமல் தெரிவித்தமை, விஸ்வரூபம் படத்தைத் தடை செய்யவேண்டாம் என நபிகளாரின் பிறந்த தின வாழ்த்தோடு சேர்த்து இஸ்லாமிய நண்பர்களிடம் பிரபல நடிகர் ரஜனிகாந்த் வேண்டிக்கொண்டமை மற்றும் இலங்கையில் விஸ்வரூபம் பட வெளியீட்டைத் தடை செய்ய தாங்கள் எடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளதாக அகில இலங்கை தௌஹீத் ஜமாத்தினர் தெரிவித்தமை என இந்தத் திரைப்படம் தொடர்பான சேதிகளும் மறைமுக விளம்பரங்களும் தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

இதற்கு முன்னர் முஹம்மது நபியைக் கேவலப்படுத்துவதான அமெரிக்கத் திரைப்பட விவகாரம் சூடுபிடித்திருந்தது.

இந்த செய்திகள் அனைத்தையும் பார்க்கும் போது எனக்குள் சில வினாக்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. எனது அறிவிற்கு அதனால் விடை காண முடியவில்லை. இந்தப் பட வெளியீட்டைத் தடை செய்யக் கோசமிடும் மற்றும் கோரிக்கை விடும் அமைப்பினர், தனிமனிதர்கள் இந்த வினாக்களுக்குத் தெளிவான விடையினைப் பகர வேண்டும் என வினயமாய் வேண்டி இக் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

1. விஸ்வரூபம் எனும் படத்திற்கு எதிராய் மட்டும் இஸ்லாத்தின் பேரில் இவ்வளவு கோசங்களும் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகிறதென்றால் இதுவரைக்கும் தமிழகத்திலிருந்து வெளியான ஏனைய திரைப்படங்களனைத்தையும் நீங்கள் ஏற்று அவைகளை இஸ்லாமியர்கள் பார்க்க முடியும் என அங்கீகரிக்கின்றீர்களா?

2. இஸ்லாம் அல்லாத ஒருத்தரின் தொழில் முயற்சி அல்லது கருத்துச் சுதந்திரத்திற்கு தடைவிதிக்குமாறும் கண்டிக்குமாறும் மார்க்கத்தில் எங்காவது தெரிவிக்கப்பட்டிருக்கிறதா?

3. இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்ற திரைப்படக் காட்சிகள் குறித்து கண்டனங்களையும் கடுமையான விமர்சனங்களையும் முன்வைக்கும் நீங்கள் இஸ்லாத்தின் பெயரில் தீவிரவாதம் செய்துகொண்டிருப்போருக்கு எதிராக எப்போதாவது குரல் கொடுத்திருக்கிறீர்களா? அன்றேல் அவர்கள் எம்மைச் சார்ந்தவர்களல்ல என பகிரங்கமாக அறிக்கை விட்டிருக்கிறீர்களா?

4. தமிழக சினிமாக்கள் சில பாகிஸ்தானிய தீவிரவாதிகளின் செயற்பாடுகளைச் சித்தரிக்கின்றன. அவற்றை நீங்கள் இஸ்லாமியர்களைப் புண்படுத்துவதாகக் கோசமிடுகிறீர்கள். அவ்வாறானால் அவர்களின் தீவிரவாதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அன்றேல் அவர்களைச் சித்தரிக்கும் போது நீங்கள் ஏன் கொதித்தெழவேண்டும்?

5. அண்மையில் காஷ;மீரின் பூஞ்ச் மாவட்டதில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானியப் படையினர் தாக்குதல் நடாத்தியது மாத்திரமல்லாமல் ரத்தவெள்ளத்தில் கிடந்த இந்தியச் சிப்பாய்களின் தலையையும் துண்டித்துச் சென்றனர். இந்தச் செயல் குறித்து எந்த இஸ்லாமிய அமைப்பாவது இது வரைக்கும் எந்தக் கண்டனத்தையாவது தெரிவித்துள்ளனவா? ஆனால் இந்தச் சம்பவம் படமாக்கப்படும் போது மாத்திரம் அந்தப் படத்திற்கு எதிராகக் காரமான கண்டனங்கள் எழுப்பப்படுகிறதே அது நியாயமா?

6. இஸ்லாம் அறியாத ஒருத்தர் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்திய தருணங்களில் எப்போதாவது தேசத்தின் அமைதி சீர்குழையும் வகையில் முஹம்மது நபி எதிர்ப்புத் தெரிவித்ததாய் ஏதும் வரலாறு இருக்கின்றதா? அன்றேல் முஹம்மது நபி இன்று இருந்திருந்தால் அவர்கள் இவ்வாறுதான் அதை எதிர்கொண்டிருப்பார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறீர்களா?

7. இஸ்லாமியர்களைத் தீவிரவாதியாய்ச் சித்தரிக்கும் சினிமாக்களுக்கு எதிராய்க் குரல் கொடுக்கும் நீங்கள் இஸ்லாமியராய் இருந்து தீவிரவாதம் செய்வோர்களுக்கெதிராய் மட்டும் ஏன் மூச்சுக்கூட விடுவதில்லை?

8. இஸ்லாமியர்களே இஸ்லாத்தில் இல்லாத விடயங்களை இஸ்லாம் என்று அரங்கேற்றம் போது கண்டும் காணாதது போல் இருந்துகொள்ளும் நீங்கள் இஸ்லாம் அல்லாத ஒருத்தர் இஸ்லாம் பற்றிய புரிதலின்றிச் செய்யும் செயல்களை மட்டும் ஏன் இவ்வளவு அலட்டிக்கொள்கிறீர்கள்? தங்களுக்குப் பாதகம் ஏற்படாதவாறு வசதிக்கேற்றாற் போல தூரத்திலுள்ள பிரச்சினைக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் பக்கத்திலே சூழ நடைபெறுகின்ற இஸ்லாமிய விரோதச் செயலைக் கண்டுகொள்ளாதது ஏன்?

9. விஸ்வரூபம் படத்திற்கு இலங்கையில் தடைவிதிக்க கடும் பிரயத்தணம் எடுத்த அகில இலங்கை தௌஹீத் ஜமாஆத்தினரிடத்திலும் முஹம்மது நபியைக் கேவலப்படுத்துவதான திரைப்படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த உள்ளங்களிடத்திலும் வினவ ஒரு பிரத்தியோகமான வினா இருக்கிறது. அண்மைக் காலங்களாக இலங்கையின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருத்தர் ஷpர்க்கான விடயங்களை அடிக்கடி பாராளுமன்றத்தில் பேசி வருகிறார். அவருக்கெதிராகக் கிளர்ந்தெழுவதும் ஆர்ப்பாட்டம் நடாத்துவதும் எப்போது?
இந்தக் கேள்விகள் அனைத்துக்குமான தெளிவை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து நான் எதிர்பார்த்து நிற்கின்றேன்.

இந்த உலகம் ஒன்றும் குறித்த சமயத்தவருக்காய் மட்டும் படைக்கப்பட்ட ஒன்றல்ல. இங்கு எல்லோரும் வாழ்கிறார்கள். எல்லோரும் தங்கள் தங்கள் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள். யாரின் மீதும் யாரும் தமது கொள்கையைப் திணிக்க முடியாது. ஆனால் விரும்புபவர்கள் தமது கொள்கையை மாற்றிக்கொண்டு இன்னொன்றைப் பின்பற்றவும் கூடும். ஸூறதுல் பகராவில் இடம்பெறும் அதிகாரத்தின் வசனம் (ஆயத்துல் குர்ஸி) இதனைத் தெளிவாக வலியுறுத்துகின்றது.

அண்மையில் கூட ஷஷசகிப்புத் தன்மையின் விளைவுதான் சகவாழ்வு என இஸ்லாம் கருதுகிறது|| என்று இஸ்லாமியச் சகோதரர் ஒருத்தர் தெளிவாகப் பேசியிருந்தார். இப்படியாக இஸ்லாம் மிக அழகாக மாற்று மதக் காரர்களுடனான உறவை ஒழுங்குபடுத்தி வரவேற்கும் போது அவர்களில் குறைகண்டு அவர்களது செயற்பாடுகளுக்குக் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் செய்து அவர்களை ஒட்டுமொத்த இஸ்லாமியர்களினதும் எதிரிகளாகச் சித்தரித்தல் எந்தளவு இஸ்லாமிய நடைமுறை என்பதனை நாமனைவரும் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தற்போது சினிமாத்துறை மற்றும் ஏனைய ஊடகங்கள் யாவும் பெரும்பாலும் இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஏராளமான விடயங்களைத் தாங்கியே வருகின்றன. அதற்காக அந்த விடயங்களைச் செய்யும் மாற்று மதச் சகோதரர்களுடன் நாம் சண்டை போட முடியாது. அவர்கள் எமது மார்க்கத்திற்கு இசைவாகத்தான் தமது வேலைகளைச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கவும் முடியாது. இங்குதான் சகவாழ்வுக்கான சகிப்புத் தன்மை அவசியமாகின்றது.
இதற்கான நிகழ்காலத் தீர்வு யாதெனில் இஸ்லாமியர்களை அவ்வாறான விடயங்களிலிருந்து தூரமாகுமாறு அறிவுறுத்துவது மட்டுமேயன்றி வேறில்லை. எமக்குள்ளே தீர்வை சரிசெய்ய முயற்சிக்காமல் மற்றவர்களுடன் முட்டிமோதுதல் ஒருபோதும் இஸ்லாமிய வழிமுறையாகாது. மற்றப்படி எமது மார்க்கத்தை இழிவு படுத்துவதற்கே திட்டமிட்டு மாற்றுமதச் சகோதரர்கள் முயற்சித்தால் அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அமைதியாகத் தெளிவுபடுத்த முயற்சிக்கலாம். அதுவும் அவர்கள் பிழையாகச் சொல்லுகின்ற, சித்தரிக்கின்ற விடயம் எம்மிடத்தே இல்லாதபட்சத்தில் மாத்திரமே. அத்தைகைய தவறு உண்மையிலேயே எம்மவர்களிடம் காணப்பட்டால் அதை சரிசெய்வதில்தான் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

இந்த சினிமாக்கள் தொடர்பான பிரச்சினையில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகக் காட்ட இந்திய சினிமா முற்படுவது தொடர்பில்தான் இதுவரைக்கும் பல சர்ச்சைககள் கிளம்பியுள்ளன. ஏனெனில் இஸ்லாம் யுத்தத்தினையோ வன்முறையையோ வரவேற்று வளர்க்கும் மார்க்கம் அல்ல. மாறாக இஸ்லாம் என்ற சொல்லின் அர்த்தமே அமைதியும் சமாதானமும்தான்.

அல்குர்ஆனில் யுத்தம் என்பதைக்குறிக்கும் “ஹர்ப்” எனும் சொல் 6 இடங்களில் மாத்திரமே இடம்பெற்றுள்ளது. ஆனால் சமாதானத்தைக் குறிக்கும் “சில்ம்” எனும் சொல் 110 இடங்களில் இடம்பெற்றுள்ளது.

ஆனால் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகக் காண்பிக்க சினிமாக்கள் மற்றும் பிற ஊடகங்கள் முற்படுகிறதென்றால் அவர்களொன்றும் எந்தவொரு அடிப்படையுமின்றி அதனைச் செய்யவில்லை. இஸ்லாமியர்களின் பேரில் உண்மையிலேயே உலகில் தீவிரவாத இயக்கங்கள் இயங்குவதனாலேயே இதுவரைக்கும் அவர்கள் அவ்வாறு காண்பிக்கிறார்கள். எனவே இங்கு மாற்று மதத்தவர்களுடன் சீரிப்பாய்வதை விடுத்து எம்மவர்களை அவ்வாறான தீவிரவாதச் செயல்ககளைப் புரிவதிலிருந்து தடுத்து நிறுத்தவேண்டும். அன்றேல் அவர்கள் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றையே செய்கிறார்கள், அவர்கள் எம்மைச் சார்ந்தவர்களல்ல என்று பகிரங்கப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அந்தச் சினிமாக்களின் சித்தரிப்புக்கள் எம்மை ஒரு போதும் காயப்படுத்தாது. ஏனெனில் அந்தச் சினிமாக்கள் காண்பிப்பது எம்மைச் சாராத ஒரு கூட்டத்தினரையே என ஆறுதலடைய முடியும்.

இப்படியாகப் பிரச்சினைகள் எமக்குள்ளேயே இருக்க கண்டனங்கள் என்றும் ஆர்ப்பாட்டங்கள் என்றும் தேசத்தின் அமைதி சீர்கெடும் வகையில் நாம் நடந்துகொள்வதும் எமது மாற்றுமதச் சகோதரர்களின் தொழில் முயற்சிக்குத் தடை விதிப்பதும் இஸ்லாமிய நடைமுறைகளல்ல என்பதே எனது வாதம். இவ்வாறான நடைமுறைகளானது மென்மேலும் எம்மீதான தப்பான அபிப்பிராயங்களையே மற்றவர்களுக்கு உண்டுபண்ணும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.

கடைசியாக ஒரு உதாரணத்தைச் சொல்லி இந்தக் கட்டுரையை முடிக்கிறேன். பல்லின மக்கள் வாழும் ஒரு பிரதேசத்தில் மாற்று மத சகோதரன் ஒருத்தன் பன்றியிறைச்சி வியாபாரம் செய்கிறானென்றால் இரவோடு இரவாச் சென்று அவனது கடையைத் தீயிட்டுக்கொழுத்திவிட்டு வருவதோ அல்லது அந்தக் கடையை மூடுமாறு ஆர்ப்பாட்டம் நடாத்துவதோ, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதோ தீர்வு அல்ல. எமது சமயத்தாரிடம், பன்றியிறைச்சி ஹராமானது. அதனை உட்கொள்வதற்கு மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது என அறிவுறுத்தி அதிலிருந்து ஒதுங்கியிருப்பதே சகவாழ்வுக்கான சகிப்புத் தன்மையாகும்.

நன்றி: ''கிழக்கு'' வார இதழ் - 14

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News