பத்திரிகை மூலம் தமிழர்களை மீண்டும் போராட அழைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்!
அரசியல் தீர்வுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அரசு அக்கறை காட்டவில்லை. எங்களைப் பொறுத்தவரை அரசியல் தீர்வு இல்லாத தற்போதைய நிலை தொடருமாக இருந்தால் எங்கள் மக்களுக்கு எதிர்காலத்தில் பெரும் ஆபத்து ஏற்படக் கூடும். இந்நிலை தொடர அனுமதிக்க முடியாது.
இவ்வாறு கொழும்புப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். வழக்கம் போல விசயத்தை விளங்கிக் கொண்டுவிட்டதைப் போல அவர் காட்ட முற்பட்டுள்ளார். ஆனால் தலைவர்கள் எனப்படுவோரின் பொறுப்பு, ஆபத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லிக்கொண்டிருப்ப தல்ல.
அதைத் தடுப்பதற்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டும்.
தீர்வுக்கு அரசு அக்கறை காட்டவில்லை, இதைத் தொடர விட்டால் தமிழ்மக்களுக்கு எதிர்காலத்தில் இன்னும் மோசமான நிலைமைதான் என்று புரிந்துகொண்டிருக்கிறார் சரி. அக்கறை காட்டாத அரசை, அதே பகைநிலையில் வைத்துக்கொள்வதன் மூலமும் முகந்திருப்பிக்கொண்டு நிற்பதன் மூலமும் என்ன சாதிக் கலாம்? இவர்கள் விரும்பாததாகச் சொல்லிக்கொள்கிற, அரசு விரும்புகிற இதேநிலை தொடர்வதற்குத்தானே உதவிக்கொண்டிருக்கிறார்கள்?
சர்வதேசத்திடம் சொல்லி, இலங்கை அரசை தீர்வை வைக்கப் பண்ணிவிடலாம் என்பது இவர்களது நோக்கமாக இருந்தால், அந்தச் சர்வதேசத்திற்காவது நாம் எதிர்பார்க்கும் தீர்வு என்ன தீர்வு என்பதைச் சொல்லவேண்டுமல்லவா! இவர்கள் ஒவ்வொரு முறை யும் இங்கு வரும் சர்வதேச நாட்டினரிடம் என்ன சொல்கிறார்கள்? அரசாங்கம் தீர்வை வைக்குதில்லை, கொஞ்சம் கவனியுங்கோ – அவ்வளவுதான்.
அவர்கள் இதற்கு என்ன சொல்வார்கள்? என்ன தீர்வு வேணு மெண்டதை அரசாங்கத்துடன் இருந்து கதையுங்கோ. இவர்களோ அவர்கள் சொல்வதை விளங்காத மாதிரி அப்பாவிகளாக முகத்தை வைத்துக்கொண்டு, மீண்டும் அதையே அவர்களிடம் சொல்கிறார்கள். தீர்வை எழுதிக்கொண்டு வந்து இலங்கை அரசிடம் கொடுத்துப் பேசவேண்டியது அமெரிக்காவினதோ தென்னாபிரிக்காவினதோ வேலை என்று நினைக்கிறார்களா?
இவர்கள் முதலில் ஒரு தீர்வுத்திட்ட நகலை வரைய வேண்டும். அது இந்த நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களும் மறுக்க முடியாத தொரு திட்டம்தான் என்று சர்வதேச நாடுகளுக்கு உணர்த்த வேண்டும். அதன்பிறகல்லவா அவர்கள் அரசிடம் அதற்கு அழுத்தம் தருவார்கள். அதன்பிறகுதானே பேச்சுக்கள் நடந்து ஒரு சமரசப்புள்ளி உருவாகும்.
இன்றைய நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் எங்களுக்குத் தான் இழப்பு அதிகம் என்றுணர்ந்த நாங்கள், இதை அவசரமாகச் செய்யவேண்டுமா? அல்லது இலங்கை அரசுதான் தீர்வை வைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே காலத்தை இழுப்பதா? சம்பந்தர் அந்தப் பேட்டியில், சர்வதேச சமூகத்துக்கு எமது நிலைமையை தெளிவாக எடுத்துக்காட்ட வேண்டுமானால் எமது மக்கள் மீண்டும் சாத்வீகப் போராட்டத்தில் இறங்கவேண்டும் என்றும் சொல்கிறார். என்ன சுத்த வருகிறார்? சர்வதேசத்துக்கு எங்கள் நிலைமை இன்னும் விளங்கவில்லை என்றா? அப்போ இதற்கு முன் நடந்த ஒவ்வொரு தேர்தலின் முடிவிலும் சர்வதேசம் வந்து இறங்கும் என்று சொன்னது, விளங்காமலே வருவார்கள் என்ற நம்பிக்கையிலா?
மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்கி, இந்த நிலைமையை மேலும் 60 வருசத்துக்கு இழுத்துச் செல்லவா மறுபடியும் சாத்வீகப் போராட்டம்? எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்று சொன்னாலும் கேட்டுக்கொண்டிருக்கக் கூடிய கேணையர்கள் என்றா இந்தத் தலைவர்கள் எங்களை நினைக்கிறார்கள்?
0 comments
Write Down Your Responses