தற்போதைய செயற்பாட்டால் வெட்கப்படும் தமிழர்கள்!
”எதற்காக வெட்கப்பட வேண்டும் தமிழர்கள்”
நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் 13வது திருத்தச் சட்டத்தின் சாதகபாதகங்களை அலசும், பயன்மிக்க கூட்டமொன்று நடை பெற்றது. கூட்டத்தின் முடிவில் கலந்துரையாடல் நேரத்தின் போது தெரிவிக்கப்பட்ட ஒரு கருத்து மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
யாழ்ப்பாண சமூகத்தின் பிரமுகர் ஒருவர், 13வது திருத்தம் பற்றிய தனது கருத்தைத் தெரிவித்துவிட்டு முத்தாய்ப்பாகச் சொன்னார்: 13வது திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களே அசல் தமிழர்கள்; அதை ஆதரிப்பவர்கள் எல்லோரும் தமிழர்கள் அல்லாதவர்கள், அவ்வளவுதான் என்று முடித்தார்.
இதைவிட பாசிஸ வெளிப்பாடு வேறொன்றிருக்க முடியுமா? இதை தமிழ்ப் பிரமுகராகக் கருதப்படும் ஒருவர், சபைநடுவே வெளிப்படையாகச் சொல்கிறார் என்பது நம் துயரமல்லாமல் வேறென்ன? தமிழர்கள் யார் யார் என்று தாங்களே தீர்மானிக்கும் அதிகாரத்தை இவர்கள் எந்த அடிப்படையில் எடுத்துக்கொள் கிறார்கள்? ஒரு திருத்தச் சட்டத்தை ஏற்பதா விடுவதா என்பதை அளவுகோலாகக் கொண்டு, இவர்களெல்லாம் தமிழர்கள் இல்லை என்று வெளியே நிறுத்தும் இந்தத் தடிப்புக்கு என்ன பெயர்?
உலக மனிதர்களின் சிந்தனை வளர்ச்சி, பன்மைத் தன்மை, ஜனநாயகம், மனித உரிமை பற்றிய புதிய கருத்தாடல்கள் எவையுமே அண்டாதகற்கால மனிதர்களாகச் சிந்தித்தும் கருத்துச் சொல்லியும் கொண்டிருப்பவர்கள்தான் இந்த சமூகத்தில் பிரமுகர்களா?
ஒரு சட்டமூலத்தை, ஒப்பந்தத்தை, இது நமது மக்களுக்கு சாதகமானது அல்லது பாதகமானது என்று அவரவர் விளக்கங்களை யாரும் முன்வைக்க முடியும். அதை சகிப்பதற்கு இயலாமல் போகிறவர்கள் யாராயிருக்க வேண்டும்? எதிர்ப்பவன்தான் தமிழன் மற்றவரெல்லாம் துரோகிகள் என்று ஒருவர் சொல்கிறாரென்றால், அவரிடம் எவ்வளவு பாசிஸக் கொழுப்பிருக்க வேண்டும்! இதுதான் நம் தமிழ்சமூகத்தின் துயரங்களின் ஊற்றுக்கண் என்று தோன்றுகிறது. இந்தப் பிரமுகர்களின் பாணியிலேயே தமிழர்களைத் தேர்வு செய்துகொண்டு போனால், நம் தமிழ் சமூகத்தின் பிரமுகர்களாய் இருந்தவர்கள் இருப்பவர்கள் யாருமே தமிழர்களாகச் சொல்லப்படத் தக்கவர்கள் இல்லை என்ற முடிவுக்குத்தான் ஒருவர் முதலில் வருவார்.
13வது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரப் பகிர்வு விஷயங்களுக்கு அருகே கூடவைத்துப்பார்க்க முடியாத வெறும் அதிகாரப் பரவலாக்க அலகுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராயிருந்தவர்கள் இந்தத் தலைவர்கள்தான்! 57ஆம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தமாகட்டும், 65ஆம் ஆண்டு டட்லி-செல்வா ஒப்பந்தமா கட்டும், 81ஆம் ஆண்டு மாவட்ட சபைகளாகட்டும், இப்போதைய 13 சட்டத்திருத்தம் போல் அதிகாரங்கள் பகிரப்படாமல் வெறுமனே மத்தியிலுள்ளதைப் பரவலாக்கியதையே ஏற்றுக்கொள்ளத் தயாராயிருந்த தலைவர்களை இந்தப் பிரமுகரது வரையறையின்படி எப்படித் தமிழர்கள் என்று சொல்லமுடியும்?
அதுமட்டுமல்ல, 13வது திருத்தத்தைவிட எவ்வளவோ மேலானதாக, ஏறக்குறைய சமஷ்டி என்று சொல்லத்தக்க, சந்திரிகா கொண்டுவந்த தீர்வுத் திட்டத்தை பாராளுமன்றத்திலேயே எரித்து நாசமாக்கத் துணைபோனவர்கள், இவரது வரையறுப்பில் பார்த்தால் எப்படித் தமிழர்களாவார்கள்? 13வது திருத்தத்தில் இருப்பது என்ன? அதை எடுத்தால் என்ன ஆபத்து வந்துவிடும்? நிராகரித்தால், அதைவிடக் கூடுதலாக தமிழ்மக்களுக்கு எடுத்துக்கொடுக்க இவர்களிடம் உள்ள அந்தத் தீர்வு என்ன? அதற்கு வழி என்ன? இவைகள் எவை பற்றியும் பேசுவதில்லை இவர்கள். எதிர்ப்பதுதான் தமிழர்களின் குணம்; அல்லாதுவிடின் துரோகிகள் என்பதே இவர்களது வரையறை. எல்லாவற்றையும் நாசமாக்கியவர்கள், நாசமாக்கிக் கொண்டிருப்பவர்கள் ஆகிய தாங்கள்தான் தமிழர்கள் என்று இவர்கள் சொல்லிக்கொள்வதைப் பார்த்து வெட்கப்பட வேண்டியவர்கள் மற்றுமுள்ள தமிழர்களே!
0 comments
Write Down Your Responses