தமிழர்கள் காலம் எங்கே போகுதடி!
”கூட்டமைப்பை நம்பினால் தமிழர்கள் இன்னும் 30 வருடததுக்கு மேல் காத்திருக்க வேண்டியதுதான்”
மார்ச் மாதம் வரும் அடுத்த ஜெனீவா திருவிழாவுக்கான அடுக்குகளை கூட்டமைப்புத் தலைவர்களும் அவர்களது ஊடகங்களும் எடுக்கத் தொடங்கிவிட்டன. கூட்டமைப்பினர் ஆபிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதற்கான அலுவல்களைப் பார்க்கப்போவதாகச் சொல்லப்படுகிறது.
இடையிலே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் ஜெனீவா காய்நகர்த்தலுக்காக புதுடெல்லியில் இறக்கிவிடப்பட்டிருப்பதாக, ஏதோ அபிமன்யுவுக்கு கர்ணனாதியோர் உருவாக்கிய வியூகம்போல, பெரும் பெரும் அலுவல்கள் நடந்துகொண்டிருப்பது மாதிரி தமிழ்மக்களுக்கு வழக்கமான திறில் படங்கள் காட்டப்படுகின்றன.
ஆபிரிக்க அமெரிக்க சுற்றுப்பயணம் போகிறவர்களும் சரி, புது டெல்லியில் காய் நகர்த்துவதாகச் சொல்லப்படுகிற சந்திரிகாவும் சரி, அங்கெல்லாம் எதை நகர்த்தி, தமிழ்மக்களுக்கு எதை எடுத்துத் தரப்போகிறார்கள் என்பது பற்றி இந்த ஊடகங்களோ தலைவர்களோ எதுவும் சொல்கிறார்களில்லை. இந்த அகிம்சாவாதிகள் எதற்காக இதுக்குப்போய் இராணுவ ரகசியம் பேணுகிறார்களென்றும் தெரியவில்லை.
இவர்கள் தேர்தல் காலங்களில் முழங்கியதை வைத்து நாம் தான் ஒரு ஊகத்துக்கு வரவேண்டியிருக்கிறது. அதாவது, அமெரிக்காவினூடாக ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு இறுக்கமான அழுத் தங்களைப் பிரயோகித்து, கொஞ்ச நாட்களுக்கு அரசின் திக்குமுக் காடல்களைப் பார்த்து ரசிக்கும் சந்தோஷத்திற்கே இம்முறையும் இவர்கள் அடுக்கெடுப்பதாகத் தெரிகிறது. இலங்கை அரசை ஜெனீவா மாநாடு நடந்து முடியும்வரை பரபரப்பில் வைத்திருக்கலாமே தவிர, அமெரிக்காவின் பொருளாதார நலனுக்கோ அல்லது இந்தியாவின் நலனுக்கோ அது மெல்லத் தலையசைத்து விட்டால் இந்த நெருக்கடியிலிருந்தும் இலங்கை அரசு இலகுவாக வெளிவந்துவிடும் என்பது அரசியலறியாக் குழந்தைப் பிள்ளைக்கும் இன்று தெரிந்த சங்கதியே.
இந்தத் தலைவர்களுக்கும் ஊடகங்களுக்கும் தேவைப்படுவது இந்த இரண்டு மாதப் பரபரப்பே. ஒரு சாராருக்கு மக்களை விறுவிறுப்புக்குள்ளாக்கி தங்கள் அரசியல் இருப்பைப் பாதுகாத்துக் கொள்ளும் தேவை. மறு சாராருக்கு மக்களுக்குப் பரபரப்பூட்டி அதனால் நடக்கும் தங்களது வியாபாரத் தேவை. இதற்கு முந்திய மாநாடுகளின் போதும் இதுதான் நடந்ததே தவிர, தமிழ்மக்களின் பிரச்சினைத் தீர்வுக்கு எந்த அறிகுறியும் மேலெழும்பவில்லை என்பது யாவருக்கும் தெரிந்ததே.
இவர்கள் சர்வதேசம் வருமென்று அறுதியிட்டுச் சொல்லி மூன்று தேர்தல்களும் முடிந்துவிட்டன் நிறைய சர்வதேச மாநாடுகளும் முடிந்துவிட்டன. இவர்களோ இன்றைக்கும் சளைக்காமல், தேர்த லுக்குத் தேர்தல் சர்வதேச மாநாட்டுக்கு மாநாடு அதே பரபரப்புகளையே காட்டிவருகிறார்கள். தானாய் விடிவெள்ளி தோன்றுகின்ற சங்கதிகள் வானத்தில் மட்டும்தான். வாழ்வில் இருள் தொடரும் என்ற ஜெயபாலன் கவிதையைப் போல மக்களும் ஒரு வித விரக்தியோடு இந்தக் கூத்துகளுக்குப் பழக்கப்பட்டுவிட்டார்கள்.
அமெரிக்காவோ ஏனைய சர்வதேசமோ இலங்கையின் மனித உரிமை தொடர்பான விடயங்களில் கரிசனை காட்டுவதும், ஜெனீ வாவில் பிரேரணையைக் கொண்டுவருவதும் தமிழர் பிரச்சினையைக் கருத்தில் கொண்டே என்று யாராவது ரீல் விடுவார்களாக இருந்தால், அவர்களுக்கு, அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் ஜோன் கெரியின் இலங்கை குறித்ததான சமீபத்திய அறிக்கையைப் பார்க்கச்சொல்லிப் பரிந்துரைக்கலாம்.
அமெரிக்காவின் மூலோபாய ஆர்வங்களுக்கான முதலீட்டை வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை மட்டும் கருத்தில்கொண்டு மேற்கொள்வதற்கு பதிலாக, சிங்கள மக்கள் வாழும் பகுதிகளிலும் செய்யப்பட வேண்டும் என்று அது குறிப்பிடுகிறது. இலங்கை அரசிட மிருந்தான அவர்களது எதிர்பார்ப்பு என்ன என்பதைப் புரிந்துகொள் ளாதது போலவே நடித்துக்கொண்டு, அமெரிக்கா வரும் சர்வதேசம் வரும் என்று கதைவிட்டுக்கொண்டே காலந்தள்ளுவோரின் ஏமாற்று புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
0 comments
Write Down Your Responses