வடபகுதியில் மக்களின் பேச்சு,கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகின்றது அமெரிக்க உயர் மட்டக்குழுவிடம் யாழ்.ஆயர் தெரிவிப்பு
.
வடபகுதியில் வாழும் மக்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு வருவதோடு தொடர்ச்சியாக ஊடகங்கள் மீதுதான அடக்கு முறையும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. 'வடபகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. இருந்தபோதும் காணாமல் போனவர்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இது குறித்த தவறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். என்று யாழ்.ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை யாழ்.வந்த அமெரிக்க உயர் மட்டக்குழவிடம் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு விஜயம் செய்து அமெரிக்கா செயலர்கள் மூவர் அடங்கிய குழுவினர் இன்று யாழ்.ஆயர் இல்லத்தில் யாழ்.ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையையும் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.
ஆயர் மேலும் தெரிவிக்கையில்,
காணமல் போனவர்களை நினைத்து இப்போதும் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எண்ணி கண்ணீர் வடித்த வண்ணமே இருக்கின்றார்கள்.
வடக்கில் தேர்தல் ஒன்றை நடத்துமாறு தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதும் தேர்தல் நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறதே தவிர அதற்கான சமிக்ஞைகள் எதுவும் இல்லை.
அரசாங்கம் பல செயற்பாடுகளை தன்னிச்சையாக செயற்படுத்தி வருகின்றது. பாராளுமன்றத்தில் இருக்கும் மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டு நினைத்ததை சாதித்து விடலாம் என்று எண்ணிக்கொள்கிறது.
இதற்கு எதிராக சர்வதேச நாடுகள் அழுத்தங்களைக் கொடுக்கும் பட்சத்தில் நன்மை பயக்கும்' என்றார்.
0 comments
Write Down Your Responses