தமிழ்த்தலைமையின் உணர்ச்சிகர பேச்சை நம்பாதீர்! நம்பியதால் என்ன?
இன்பங்களிலெல்லாம் தலையாய இன்பம் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்திப் பார்ப்பதிலேதான் இருக்கிறது என்பார்கள். அடிப்படைத் தேவைகள் கூட இன்னும் சரிவரக் கிடைக்காத வர்கள் பலர் இங்கிருக்கிறார்கள். உண்ண உணவு, உடுக்க உடை, தங்க இடம்.... இவற்றோடு வெற்று வாய்சாலகங்களால் பறிக்கப்படாத நிம்மதியான ஓர் எளிய வாழ்க்கைக்கு அவர்கள் ஏங்குகிறார்கள்.
அவர்களை அப்படியே கஷ்டப்பட விட்டுவிட்டு, நடைமுறைச் சாத்தியமில்லாதவற்றுக்காக வீரவசனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்திக்கொண்டிருப்பதை இந்த முறையாவது புத் தாண்டுத் தீர்மானமாக எடுங்கள் என இந்தத் தமிழ்த்தலைமை வேடமிட்டிருப்பவர்களிடம் நாம் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எவ்வளவு காலத்துக்குத்தான் உணர்ச்சிகரமான பொய்களிலேயே மக்களின் வாழ்வைத் தேய்த்துக் கொண்டிருப்பார்கள்?
முடியக்கூடியதைச் செய்து மக்களுக்கு வாழ வழியைக் காட்டாமல், குதிரைக்கு முன்னால் கரட்டைக் கட்டித் தொங்கவிட்டது போல் எட்டிப்பிடிக்க முடியாத ஒன்றைக் காட்டி மக்களை ஏமாற்றி நடத்திச் செல்லக்கூடாது. அது மக்களின் அவலத்தில் குளிர்காயும் மிக இழிவான அரசியல் என்பதை இனிமேலும் புரியாததுபோல நடித்துக்கொண்டிருக்கவும் கூடாது.
சாத்தியமானது எதுவோ அதைக் கண்டுகொள்ளாமல், பொய்மைகளுக்காக ஏங்கி மக்களைக் காத்திருக்க வைக்கும் ஏமாற்றில், வசதியான வாழ்விலிருப்பவர்கள் தங்கள் அரசியல் ரோசங்கள் தினவுகளைத் தீர்த்துக்கொண்டிருக்கக்கூடாது.
பூத்த மலரை எடுத்துக்கொள்ளாமல் அது முள்ளில்லாமல் பூக்கட்டும் என்று காத்திருப்பதும், நிலவின் ஒளியை ரசிக்காமல் அதன் கறையைச் சொல்லிக் கவலை கொள்வதும், கடலைத் தாண்டப் படகு கிடைத்தாலும் அலை இருக்கிறதே என்று கரையில் நின்று கண்ணீர் விடுவதும் நமதிந்த வாழ்க்கையை வீண டித்துக்கொள்ளும் வேலைகள்தான்! இயலாமைகளைச் சொல்லி மக்களை இருட்டில் விடுவதில் ஒன்றும் பெருமையில்லை. அது அவர்களுக்கான உண்மையான தலைமைத்துவமும் இல்லை.
நம்மை நாமே குறுக்கிக் கொண்டும், பிளவுபடுத்திக் கொண்டும் அழிந்துகொண்டிருப்பதையே விரும்புவது ரசிப்பது எல் லாம் எவ்வளவு அவலமான மனநிலை! குற்றச் செயல்களும் அவலங்களும் அதிகரிப்பதில் ஊடகங்களுக்கென்ன அவ்வளவு குதூகலம்?
பகையுணர்ச்சியும் வன்மமும் வறட்டு ரோசங்களும் நம் வாழ்வை அழிப்பதைத் தெரிந்து கொள்வோம். மேதைமை மிக்க திரைப்பட இயக்குனரான அகிரா குரோசாவாதன் படங்களைப் பற்றிச் சொல்லுகையில்: உலகெங்கிலும் மக்கள் தாமே தமக்குத் துன்பத்தை உண்டுபண்ணுவதற்கு முனைவதாகவே தோன்றுகிறது. இப்பொழுதை விட இன்புற்றிருப்பதற்கு மனித னுக்கு உரிமை உண்டு. அச்செய்தியைத்தான் நான் உணர்த்த முயன்றிருக்கிறேன். என்று சொன்னார்.
மக்கள் இன்புற்றிருக்கும் அந்த உரிமையைத் தடுத்துக் கொண்டிருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களது வாழ்க்கையை நசித்து யாரும் தங்கள் வீம்புகளை நிகழ்த்திக் கொண்டிருக்கக் கூடாது. எந்தத் தீர்வையும் இங்கு வரவிடாமல் தடுக்கும் வாய்வீச்சு அரசியல் செய்யும் கொடூர ஏமாற்றை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்கள் தத்தம் மனதில் புதைந்துள்ள துவேசத்தையும் வன்முறையையும் உணர்ந்து அதை விலக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியில் ஈடுபடாத வர்களுக்கு, தமக்குள் மறைந்து கிடக்கும் துவேசத்தை தம்மால் அறிய முடியாமல் போகும். தொடர்ந்தும் நம் துன்பங்களுக்கான பழியை மற்றவர்களின் மீதே போட்டுக்கொண்டு வெறும் பகைவளர்ப்புப் பேச்சுக்களால் மக்களை மீளமுடியாமல் மறுக விடுவதாக இருக்கும்.
0 comments
Write Down Your Responses