பாலியல் குற்றம் புரியும் ஆண்களுக்கு இரசாயன முறையில் நலமடியுங்கள். ஜெயலலிதா!
ஐயோ வேண்டாம் என்கின்றார் திருமாவளவன்.
'பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆண்களை ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய வேண்டுமென இந்தியாவின் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா கூறியுள்ளார். இதை உலகமெங்கும் மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்த்து வருகின்றனர். இத்தகைய தண்டனை முறைகளை நம் நாட்டில் புகுத்த வேண்டாம்' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாலியல் வன்முறை தொடர்பாக தமிழக அரசு செய்துள்ள சில அறிவிப்புகள் ஏற்கத்தக்கவையாக இருந்தாலும் பல ஏற்கத்தக்கவையாக இல்லை. காவல் துறையினருக்கு பெண்கள் தொடர்பான சட்டங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என விடுதலை சிறத்தைகள் வலியுறுத்தி வந்தது.
தற்போது தமிழக அரசின் அறிவிப்பில் இந்த இரண்டு நடவடிக்கைகளும் இடம் பெற்றுள்ளன. இதற்காக தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
பாலியல் வன்முறை தொடர்பாக தமிழக அரசு செய்துள்ள மற்ற அறிவிப்புகள் ஏற்கத்தக்கவையாக இல்லை.
இத்தகைய வன்முறையில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப் போவதாக தமிழக அரசு கூறியுள்ளது. குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட தடுப்பு காவல் சட்டங்களை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடு.
பிணையில் வரமுடியாத இத்தகைய சட்டங்கள் காவல் துறையினரின் தவறான பயன்பாட்டுக்கே வழிவகுக்கும். எனவே குண்டர் தடுப்புச் சட்டத்தில் தமிழக அரசு செய்யத் திட்டமிட்டுள்ள திருத்தங்களை கைவிட வேண்டும்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆண்களை ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் கூறியுள்ளார். அமெரிக்காவிலும் ரஷியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் இத்தகைய தண்டனை முறை நடைமுறையில் உள்ளது. பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தம் ஆண்களுக்கு இந்த தண்டனையை அந்நாடுகளில் விதிக்கிறார்கள்.
இதை உலகமெங்கும் மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்த்து வருகின்றனர்.
இத்தகைய தண்டனை முறை கண்ணுக்கு கண், பல்லுக்குப்பல் என்கிற பழிவாங்கும் நோக்கை அடிப்படையாக கொண்டதாகும். நாகரீக சமுதாயத்தில் இதற்கு இடம் தரக்கூடாது. எனவே இத்தகைய தண்டனை முறைகளை நம் நாட்டில் புகுத்த வேண்டாம்' என்று கூறப்பட்டுள்ளது.
0 comments
Write Down Your Responses