பாலியல் கொடுமைக்குள்ளான டெல்லி பெண் சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணம்
சிங்கப்பூர்: டெல்லியில் ஓடும் பஸ்சில் ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வந்த 23 வயது மருத்துவ மாணவி சிங்கப்பூர் மெளன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இன்று அதிகாலையில் உயிரிழந்தார். மரணத்துடன் கடுமையாக போராடி வந்த அந்த மாணவி, தான் வாழ வேண்டும், வாழ விரும்புகிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவரது வாழ்க்கை இன்று காலையில் முடிவுக்கு வந்து விடட்து. மாணவி மரணத்தைத் தழுவியபோது அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர் அருகில் இருந்தனர். இந்தியநேரப்படி அதிகாலை 2.15 மணிக்கு மாணவி உயிரிழந்தார். அவரது உடல் உடனடியாக சிங்கப்பூர் அரசு பொது மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்னர் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் உடல் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் இன்றே தனி விமானத்தில் அவரது உடல் இந்தியா கொண்டு வரப்படும்.
மாணவியின் மரணம் குறித்து சிங்கப்பூர் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கடைசி வரை அந்தப் பெண் மிகவும் தைரியத்தோடு உயிருக்குப் போராடி வந்தார். ஆனால் அவரது மூளை மற்றும் நுரையீரலில் ஏற்பட்டிருந்த கடும் பாதிப்புகள் அவரது நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில், அமைந்து விட்டது. அவரது உடலும் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் போய் விட்டது. எட்டு சிறப்பு மருத்துவர்கள் அந்த மாணவியைக் காப்பாற்ற கடுமையாக போராடினர். அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் கடந்த 2 நாட்களாக அவரது உடல் நிலை மோசமாகி வந்தது. பல்வேறு உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின என்று கூறப்பட்டிருந்தது. கடந்த 13 நாட்களாக மாணவி உயிருக்குப் போராடி வந்தார். அவர் நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்று கோரி நாடு முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்களும், பிரார்த்தனைகளும் நடந்தவண்ணம் இருந்தன.
டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் தொடர் போராட்டங்களும் நடந்து வந்தன. அப்பெண்ணுக்கு மூன்று பெரிய அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஒருமுறை மாரடைப்பும் வந்தது.
இதையடுத்தே அவரை சிங்கப்பூர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் 16ம் தேதி இப்பெண் தனது நண்பருடன் பஸ்சில் பயணித்தபோது ஒரு கும்பல் அப்பெண்ணை கொடூரமாக சிதைத்துத் தாக்கியது.அவரது நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டார். பின்னர் அப்பெண்ணையும்,நண்பரையும் ஒரு பாலத்தில் தூக்கி வீசி விட்டுஅக்கும்பல் தப்பி விட்டது. அக்கும்பலைச் சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.
கற்பழிப்பு குற்றவாளிகள் மீது பாய்கிறது கொலை வழக்கு!
குறிப்பிட்ட 23 வயது பிஸியோதெராபி மருத்துவப் படிப்பு மாணவி பலியாகிவிட்டதையடுத்து கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டுள்ள 6 பேர் மீதும் போலீசார் கொலை வழக்கும் பதிவு செய்யப்படவுள்ளது. இவர்களில் பஸ் டிரைவர் ராம்சிங் முக்கிய குற்றவாளி ஆவான். அவனது சகோதரன் முகேஷ் மற்றும் அக்ஷய், பவன், வினய் ஆகியோர் மற்ற குற்றவாளிகளாவர். 6வது குற்றவாளி 15 வயது மைனர் என்பதால் அவன் பெயரை மட்டும் போலீசார் வெளியிடவில்லை.
குற்றாளிகள் 6 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி), 201 (தடயங்களை அழித்தல்), 365 (கடத்தல்), 376(2) (ஜி) (கும்பலாக கற்பழித்தல்), 377 (இயற்கைக்கு விரோதமான குற்றம் புரிதல்), 394 (தாக்கி காயப்படுத்தி வழிப்பறி செய்தல்) மற்றும் 34 (துன்புறுத்தல்) ஆகிய 7 பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் குற்றவாளிகளிடம் போலீசார் விசாரண நடத்தி வந்தனர். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை மற்ற கைதிகளுடன் வரிசையில் நிற்க வைத்து அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது. மாணவியின் நண்பர் அந்த அணி வகுப்பை பார்த்து கற்பழிப்பு குற்றவாளிகளை மிகச் சரியாக அடையாளம் காட்டிவிட்டார்.
இந் நிலையில் இன்று காலை சிங்கப்பூர் மருத்துவமனையில் அந்த மாணவி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து குற்றவாளிகள் 6 பேர் மீதும் கொலை குற்றம் பாய்ந்துள்ளது. அவர்கள் மீது டெல்லி போலீசார் இன்றே இந்திய தண்டனை சட்டம் 302 (கொலை) பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்துய உள்ளனர்.
மேலும்மாணவி கொடுத்த மரண வாக்குமூலம், அவர் நண்பர் கொடுத்த வாக்குமூலமும் சேர்க்கப்பட்டு இந்த வழக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. திங்கள்கிழமை தடயவியல் அறிக்கையும் தயாராகிவிடும். இவற்றை ஒருங்கிணைத்து வரும் ஜனவரி 2ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட மறுநாளே இந்த வழக்கு விசாரணை தொடங்கி விடும் என்று தெரிகிறது. வழக்கு விசாரணை தினமும் நடத்தப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது.
கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டோம் என்று வழக்கறிஞர்களும் அறிவித்துள்ளனர். வழக்கு விசாரணையை இதுவரை இல்லாத அளவுக்கு மிக விரைவாக நடத்தி முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனையை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று கொடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனவே குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
நன்றி தட்ஸ்தமிழ்
0 comments
Write Down Your Responses