குருடி கதை போல் வடமாகாணசபை தேர்தல்
நம் பிரதேசத்தில் இராணுவ நிர்வாகத்துக்கான நியாயங்களையே தொடர்ந்து வழங்காமல், சிவில் நிர்வாகத்தைக் கையேற்றுக்கொண்டு, தென்னிலங்கைத்தரப்பின் சந்தேகங்களைப் போக்குவதன் வாயிலாக மெல்ல மெல்ல வேண்டிய அதிகாரங்களையும் பெற்று வளம்பெருகும் நம் கனவுப் பிரதேசத்தைக் கட்டியெழுப்பக்கூடிய காலம் வடக்கிற்கு வந்திருக்கிறது.
மனித வரலாற்றில், மிகப் பழமையான நிர்வாகம் இராணுவ நிர்வாகம்தான். நூறு ஆண்டுகளுக்கு முன்புவரைகூட, உலகின் மிகப் பெரும் நிறுவனங்கள், அரசுகளின் படைகளே. நாட்டிற்காக உயிரை விடவும், வெற்றி பெற்றால், கொஞ்சம் கொள்ளையடித்துக் கொள்ளவும் அனுமதி பெற்ற தனி நபர்கள் அடங்கிய மாபெரும் குழு. பெரும்பாலும், உடல் பலத்தாலும், அரச பக்தி அல்லது தேச பக்தியாலும் நிர்வகிக்கப்பட்டு வந்த ஒன்று.
அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட பல நூல்களும், போர்த் தந்திரங்கள், நாட்டை நிர்வகிப்பது போன்றவையே. Sun Tzu வின் போர்க்கலை, வள்ளுவரின் திருக்குறள், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், மாக்கியாவில்லியின் இளவரசன், அடம் ஸ்மித்தின் wealth of Nations போன்றவை படையினர் மூலம் நாட்டை நிர்வகிப்பது பற்றியே பேசியிருக்கின்றன. முதலாம் உலகப் போர் காலத்தில், மேலாண்மை என்னும் கோட்பாடு மெல்ல மெல்ல வலுப்பெற்றது. ஒவ்வொரு வேலையையும் சிறு சிறு பாகங்களாகப் பிரித்து, அதற்குத் தேவையான நேரம், உழைப்பு முதலியவை கணிக்கப்பட்டு, வேலையை மேலாண்மை செய்யும் ஒரு நோக்கு தொடங்கியது. இவற்றை சாதாரண பொதுமக்களிலிருந்து அவர்களால் தெரிவு செய்யப்பட்டு வருவோரே செய்யும் நிலை படிப்படியாக உருவாகியது.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்று வள்ளுவர் ஒரு நிர்வாகியின் திறனை வரையறுத்தார். சிறந்த தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டிய மக்களின் பொறுப்பும் அதுவே. நிர்வாகிகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். தன் எல்லைக்குள்ளேயே சிந்தித்து அதற்குள் தம்மைத் தலைவர்களாக தக்கவைத்துக் கொள்பவர் ஒரு வகை. இவர்கள் மற்றவர்களையும் கணக்கிலெடுத்து அவர்களது தேவைகளையும் புரிந்துகொண்டு தடைகளை அகற்றி நிரந்தர இலக்கு நோக்கிச் செல்ல முடியாதவர்கள்.
இன்னொருவகை, தன் பிரிவு தாண்டி, தன் நிறுவனத்தின் இலக்கைத் தாண்டி, நிறுவனம் இயங்கும் சூழலையும் வெளிசக்திகளையும் அறிந்து கொண்டு, நிறுவனத்தின்; நீண்டதூர இலக்கை நோக்கி, அவற்றை வழி நடத்தும் திறன் கொண்ட நிர்வாகிகள். இவர்கள்தான் தலைவர்கள்! தம் தரப்பை மட்டுமல்லாது, எதிர்த்தரப்புகளின் எண்ணங்களையும் அவர்களுக்கும் இருக்கக் கூடிய சிக்கல்களையும் யதார்த்தத்தையும் ஒரு மனமுதிர்வுடன் எதிர்கொண்டு தாம் சாந்தோருக்கும் புறச் சூழலுக்கும் வெற்றிதேடித் தருபவர்களே மிகப் பெரும் தலைவர்கள்.
இப்போது தமிழ்மக்களுக்கு தங்களது தலைமை எதுவென்பதைத் தீர்மானித்துத் தேர்ந்துகொள்ள வேண்டிய காலம் மற்றுமொருமுறை வந்திருக்கிறது. இதுவரைகாலம்போல எதிர்ப்பு அரசியலின் மூலம், மக்களுக்கு எதையுமே சாதித்துத் தராமல் தங்கள் தலைமையை மட்டுமே காப்பாற்றி வருபவர்களையா அல்லது பகைமறப்பையும் இணக்கத்தையும் முயன்று இந்த நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் உண்டாக்குவதன் மூலம் செழிப்பான எதிர்காலத்தைக் கொண்டுவரக் கூடியவர்களையா தலைவர்களாகத் தெரிவுசெய்து கொள்ளப்போகிறோம்? இந்த முடிவிலேயே நம் மக்களின் தொடர் அவலங்களை மாற்றும் விவேகம் தங்கியிருக்கிறது.
0 comments
Write Down Your Responses