காதலித்த பெண்ணை கைவிட்டு புதிய காதலியை தேடிப்பிடித்த முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரர் சி.வி.விக்னேஸ்வரன்
வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக வந்திருப்பது காதலித்த பெண்ணை கைவிட்டது போல் இருப்பதாக கூட்டமைப்பின் வடமாகாண சபை முதன்மை வேட்பாளரும் ஓய்வு பெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியில் அவர் இதனை தெரிவித்தார்.
இயற்கை நிறைந்த அமைதியான வாழ்வை நேசிப்பதே எனது வாழ்க்கையாகவும் எனது காதலியாகவும் கொள்கின்றேன் தற்போது திடீரென வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஏகமனதாக என்னை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனைக் ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களின் அரசியல் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் மாகாண சபை ஊடாக தீர்த்து வைக்கும் பாரிய பொறுப்பு எனக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அதனை முழு மூச்சுடன் ஏற்றுக் கொண்ட போதிலும் உள் மனதில் காதலித்த பெண்ணை கைவிட்டது போல் ஒரு ஏக்க உணர்வு காணப்படுகின்றது. எவ்வாறாயினும் எனது பொறுப்பை முழு அளவில் ஏற்றுக்கொண்டு அதனை இறுதி வரையில் நேர்மையாக போராடி வெற்றி கொள்வேன் என குறிப்பிட்டார்.
வடமாணசபைத்தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தயாமாஸ்டர் என உள்ளிட்ட யார் போட்டியிட்டாலும் தமிழர் என்ற வகையில் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை முதன்மையாக கொண்டு செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் எதிர்காலத்தில் தமிழர்களின் நிலைமை கேள்விக்குறியாகிவிடும் என குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபையில் உள்ள அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்தி மக்களுக்கு உரிய சேவையினை வழங்க கூடிய அதிகாரம் சட்டத்தில் மாகாண சபைக்கு வழங்கப்படவில்லை. மாறாக ஆளுநருக்கே கூடுதலாக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் வட மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்றாலும் பாரிய நெருக்கடியினையே எமக்கு சந்திக்க நேரிடும்.
அதே போன்று அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அனைத்தையும் மட்டுப்படுத்தும் நோக்கிலான அதிகாரக் குறைப்பு நாடகத்தை ஆடுகின்றது என்று எண்ண தோன்றுகின்றது. ஆகவே பல சவால்கள் மாகாண சபையில் இருக்கின்றது என்பதை நான் அறிவேன். இது வட மாகாணத்தில் வலுவான நிலையில் காணப்படும் என்றும் எனக்கு தெரியும்.
எவ்வாறாயினும் அரசியல் என்பதை விட மக்கள் பணி தமிழர்களுக்கு சேவை செய்யும் சந்தர்ப்பமாக நினைக்கும் போது அதனை சட்ட ரீதியாக கையாண்டு நெறிப்படுத்த முயற்சிப்பேன்.
கொடிய யுத்தம் ஆட்கொண்டு மக்கள் பாரிய அழிவுகளிலிருந்து தற்போது விடுபட்டு ஜனநாயக காற்றை சுவாசிக்க விரும்புகின்றனர். இதனை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் வட மாகாணத்தில் தற்போது காணப்படுகின்ற இராணுவச் சூழல் அதற்கு ஏற்புடையதல்ல. குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் இராணு அதிகாரியொருவர் ஆளுநராக பதவியில் இருப்பதை அனுமதிக்க முடியாது.
எனது முதல் கோரிக்கையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இதனை முன் வைக்க விரும்புகின்றேன். வட மாகாண சபை ஆளுநராக உள்ள ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியை உடனடியாக மாற்றுங்கள். ஏனெனில் அவரின் செயற்பாடுகள் சிவில் நிர்வாகத்திற்கு ஒத்துவராது. அதேபோன்று மனித உரிமைகள் தொடர்பிலோ சிவில் நிர்வாகம் தொடர்பிலோ சிறந்த வெளிப்பாடுகளை இராணுவ அதிகாரியிடமிருந்து எதிர் பார்க்க முடியாது.
தொடர்ந்தும் மக்கள் இராணுவக் கட்டளைகளின் பிரகாரம் வாழ்வதை விரும்புவதில்லை. ஆகவே வட மாகாண சபைக்கு சிவில் அதிகாரியை ஆளுநராக நியமிக்க வேண்டும்.
அரசியலமைப்பில் காணப்படுகின்ற மாகாண சபைகளுக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் கிடைக்கப்பெற்றுள்ள அதிகாரங்களை வலுவான நிலையில் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் இதில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக குமாரதுங்க மேல் மாகாண சபை முதலமைச்சராக இருக்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கையாளாக தம்மை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையே தற்போதும் காணப்படுகின்றது. 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக செயற்படுத்த பாரிய நெருக்கடிகள் சட்டப்பொறி முறையில் முறையில் காணப்படுகின்றது. இவற்றை சீர் செய்ய வேண்டும். இதனை மட்டுமே தற்போது நான் கூற விரும்புகின்றேன். ஆனால் அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்ட இரு அதிகாரங்களை மாத்திரம் குறைக்க நினைப்பது எதற்கு என்று புரியவில்லை.
வட மாகாண சபை தேர்தல் அரசாங்கத்தின் சார்பில் தயா மாஸ்டர் அல்லது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட யார் போட்டியிட்டாலும் அவர்கள் தமிழர்கள் என்பதை மறந்து விடக் கூடாது. கடந்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக வட மாகாணம் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை கருத்தில்கொண்டு அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே செயற்பட வேண்டும்.
தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை விட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே அவசியமானதாகும். நாம் தமிழர்களின் உரிமையை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்யாவிட்டால் யார் பெற்றுக் கொடுக்கப்போகின்றார்கள். பிளவுபட்டு போனால் நாளை இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமைகளும் தடயங்களும் அழிந்து போய் விடும். எனவே தேர்தலின் பின்னரும் தமிழர்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும் என அச்செவ்வியில் குறிப்பிட்டார்.
0 comments
Write Down Your Responses