தேர்தல் ஆணையாளர் நிகாபை கழற்றுமாறு கட்டளையிட்டமைக்கு நன்றி சொல்கிறார் முஸம்மில்!
இம்முறை நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் தங்கள் முகத்தை மறைத்து வாக்களிக்க முடியாது என்று அறிவித்துள்ளமை போற்றற்குரியது என கொழும்பு நகர சபை உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளருமான முஹமட் முஸம்மில் குறிப்பிடுவதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இந்த ஆடையின் மூலம் முஸ்லிம் பெண்கள் சமூகத்தில் இழிந்துரைக்கப்படுவதைப் போன்றே சமூகத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படவும் இந்த ஆடை காரணமாக அமைகின்றது எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
அண்மைக் காலத்திலேயே எங்களது முஸ்லிம் பெண்கள் மத்திய கிழக்கைப் பின்பற்றி இந்த ஆடையை அணியத் தொடங்கியுள்ளதால், தேர்தல் ஆணையாளருக்கு இவ்விடயத்தில் கட்டளையிடப்பட்டுள்ளதாகவும் முன்னர் பதவி வகித்த தேர்தல் ஆணையளர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
இஸ்லாமிய மதம் எடுத்துக்காட்டுகின்ற ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் இதன் மூலம் தடை ஏற்பட்டு, இந்த முகமூடியின் மூலம் முஸ்லிம் பெண்கள் சமூகத்திலிருந்து பிரித்துப் பார்க்கப்படுவதாகவும், இது இஸ்லாமிய மதத்தை நிந்திக்கும் செயல் எனவும் முஸம்மில் மேலும் குறிப்பிடுகின்றார்.
இந்நிலை தொடர்ந்தால் இது பிரச்சினைக்கு வழிவகுத்து, ஏகாதிபத்தியவாதிகளுக்குத் தேவையான முறையில் இந்நாட்டில் புதியதொரு பிளவு நாட்டில் ஏற்படுவதை யாராலும் தடுக்கமுடியாமல் போய்விடும் எனவும் முஸம்மில் கவனத்திற்குக் கொண்டுவருகின்றார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses