ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த தென் ஆபிரிக்கா!
தென் ஆபிரிக்க - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகுந்த விறுவிறுப்புக்கு மத்தியில் சமநிலையில் முடிந்தது.
இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 550 ஓட்டங்களை எடுத்தது. மைக்கெல் கிளார்க் 230 ஓட்டங்களையும் வார்னர் 119 ஓட்டங்களையும் மைகெல் ஹஸி 103 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பந்துவீச்சில் மோர்கெல் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பதிலுக்கு களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி அணி தனது முதல் இன்னிங்ஸில் 388 ஓட்டங்களை எடுத்தது. கிராண்ட் ஸ்மித் 122 ஓட்டங்களையும் டுபிளெஸிஸ் 78 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இதையடுத்து மீண்டும் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 267 ஓட்டங்களை பெற்றிருந்த போது டிக்ளே செய்தது. இதையடுத்து தென் ஆபிரிக்காவுக்கு வெற்றி இலக்காக 430 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் சிடில் லியொன் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சினால் ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை இழந்த தென் ஆபிரிக்க அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.
இன்று இறுதி நாள் போட்டி தொடங்கியதும் மீதமுள்ள 6 விகெட்டுக்களை கைப்பற்ற விடாது டு பிளெஸிஸ் டிவிலியர்ஸ் காலிஸ் என தென் ஆபிரிக்க வீரர்கள் கடுமையாக போராடினர். 5 வது விக்கெட்டுக்காக டிவிலியர்ஸ் டு பிளெஸிஸ் இணைந்து 67 ஓவர்கள் விளையாடி 89 ரன்களை மட்டும் எடுத்திருந்தனர். டிவிலியர்ஸ் 220 பந்துகள் எதிர்கொண்டு 33 ரன்களை மாத்திரம் எடுத்து ஆஸ்திரேலியாவை வெறுப்பேற்றினார்.
உணவு இடைவேளைக்கு பிறகு 134/5 எனும் நிலையில் ஜேக் கேலிஸ் காயத்துடன் களமிறங்கினார். அவரும் டு பிளெஸிசும் இணைந்து 39 ஓவர்கள் கடத்தி 99 ரன்களை பெற்றனர். கேலிஸ் 46 ரன்களுடன் ஆட்டமிழந்த போது தேநீர் இடைவேளை வந்துவிட்டது.
ஒரு முனையில் தனது கன்னிசதத்துடன் டுபிளெஸிஸ் தொடர்ந்து நிதானமாக ஆடிவந்தார். மறுமுனையில் டேல் ஸ்டெய்ன் டக்கில் ஆட்டமிழந்த போதும் 28 பந்துகளை தாக்குப்பிடித்தார். அவரை அடுத்து களமிறங்கிய கிளீன் வெல்ட் 17 பந்துகள் தாக்குப்பிடித்து 3 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.
இறுதியில் தென் ஆபிரிக்கா 240 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்கள் இழந்திருந்த போது மீதம் ஒரு ஓவர் வீசுவதற்கே நேரம் இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் விரைவாக பந்துவீசி மேலும் 2 ஓவர்களை முடிவு நேரத்திற்குள் வீசுமாறு செய்தது ஆஸ்திரேலியா. அப்படி இருந்தும், மீதமிருந்த இரு துடுப்பாட்ட வீரர்களையும் ஆஸ்திரேலியாவால் ஆட்டமிழக்க செய்ய முடியவில்லை. இறுதியில் 248 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை மாத்திரமே தென் ஆபிரிக்கா இழந்திருந்தது.
இதனால் போட்டி சமநிலையில் முடிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆட்டநாயகனாக சென்னை சூபப்ர் கிங்ஸ் புகழ் டுபிளெஸிஸ் தெரிவானார். இதன் மூலம் தென் ஆபிரிக்கா - ஆஸ்திரேலியா விளையாடிய இரு டெஸ்ட் போட்டிகளும் சமநிலையில் முடிந்தது. கடைசி டெஸ்ட் போட்டி பேர்த்தில் தொடங்கவிருக்கிறது. ஒரு டெஸ்ட் போட்டி எவ்வாறு விளையாடப்பட வேண்டும் என்பதற்கு நல்லதொரு உதாரணமாக தென் ஆபிரிக்க வீரர்களின் துடுப்பாட்டம் அமைந்திருந்தது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மும்பையில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா படு தோல்வி அடைந்திருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் கம்பீரை தவிர, வேறு எவரும் 20 பந்துகளை கூட எதிர்கொள்ளவில்லை.தென் ஆபிரிக்க டெஸ்ட் வீரர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமிது.
0 comments
Write Down Your Responses