சென்னையின் புகழ் கேளீர்! நகரம், நாகரிகம்..
வாழ்க்கை சிலருக்கு எப்படி அமைந்து போகிறது? ஒரிசா பழங்குடி இனத் தலைவர். ஒரு மகள். வறுமை. அவளுக்கு வேலை கிடைக்கிறது. அது சென்னையில். வீட்டுப் பணிப்பெண் வேலை.
காட்டை விட்டு வெளியே போயே இருக்காத அந்த பழங்குடி இனத் தலைவர் அருமை மகளை சென்னையில் வேலையிடத்துக்குக் கூட்டிப் போய் விட வாழ்விலேயே முதல் தடவையாக ரயிலில் வருகிறார். ரயிலும், பயணமுமே அவரை பதட்டமடையச் செய்கின்றன.
சென்னை அம்பத்தூரில் மகள் வேலை பார்க்கப் போகும் இடத்தில் நல்ல வேளையாக அவரை அன்பாக வரவேற்கிறார்கள். ஆனால் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை.
வெளியே போகிறவர் தொலைந்து போகிறார். சர்ச் என்ற ஒரு வார்த்தை தவிர வேறே எதுவும் தெரியாமல் அந்த ஒரியப் பழங்குடி இனத் தலைவர் அம்பத்தூர் வீதிகளில் அலைந்த சோக முரண் நீண்டு கொண்டே போகிற்து. கிறிஸ்துவ ஊழிய சபை மூலம் மகளுக்கு வேலை கிடைத்ததால் சர்ச் என்ற ஒரு சொல் மட்டும் அந்த அப்பாவி மனிதர் மனதில் தங்கிவிட்டிருக்கிறது.
லோக்கல் கழிசடைகள் அவர் வைத்திருந்த சொற்ப்ப் பணத்தையும் பிடுங்கிக் கொண்டு அடித்துப் போட்டு விட்டுப் போய்விடுகிறார்கள்.
கடைசியில் பெண்ணுக்கு வீட்டுவேலைக்கு அமர்த்தியவர்கள் காவல் துறை உதவியோடு அவரைத் திரும்பக் கண்டு பிடித்து ஒரிசாவுக்கு ரயிலேற்றி விடுகிறார்கள்.
இது ஆர்ட் பிலிம் இல்லை. நேற்று இந்து பத்திரிகை செய்தி.
வீட்டுப் பணிப்பெண் வேலை கிடைத்த அன்பு மகளுக்காக காட்டைத் துறந்து இவ்வளவு தூரம் வந்து அடி உதை வாங்கிய அந்தப் பழங்குடித் தலைவர் நாட்டு மனிதர் நாகரிகம் பற்றி, நகரம் பற்றி, சென்னை பற்றி என்ன நினைப்பார்?
சென்னைவாசி என்பதற்கு வெட்கப்படுகிறேன்.
http://www.thehindu.com/news/cities/chennai/lost-found-a-traumatised-odisha-tribal-chief/article4127575.ece
-இரா.முருகன்
0 comments
Write Down Your Responses