முன்னாள் இந்திய பிரதமர் ஐ.கே. குஜ்ரால் காலமானார்
முன்னாள் இந்திய பிரதமர் ஐகே குஜரால் இன்று டெல்லியை அடுத்துள்ள குர்காவுன் நகரில் காலமாகியுள்ளார்.அண்மைக் காலமாகவே நுரையீரல் சுவாச கோளாறு நோயினால் அவதிப்பட்டு வந்த அவரை, இன்று மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். 2 மணிநேரம் போனால்தான் குஜராலின் நிலை பற்றி கூறமுடியும் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்த வேளையில், மருத்துவர்கள் அறிவுறுத்திய 2 மணி நேரத்துக்குள்ளாகவே ஐ கே குஜராலின் உயிர் பிரிந்ததாகத் தெரிகிறது.
இதை நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே உறுதி படுத்திய பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவித்த பின்னர், இரு அவைகளும் ஒத்திவைக்கப் பட்டது. ஐக்கிய முன்னணி சார்பாக பிரதமர் பதவி வகித்த ஐ கே குஜரால் 1997 முதல் 1998 வரை இந்திய பிரதமராக பதவி வகித்தார்.
தனது 11 வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர். அவரது பெற்றோரும் சுதந்திர போராட்ட தியாகிகளே. தேவ கௌடா அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த குஜ்ரால் தகவல் தொழில்நுட்பம், செய்தி, ஒலிபரப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துவந்தார். ரஷ்யாவுக்கான இந்திய தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
1980 களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். தேவ கௌடா தலைமையிலிருந்த அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக காங்கிரஸ் கட்சி மிரட்டியதை அடுத்து குஜ்ரால் பிரதமராக்கப்பட்டார்.
0 comments
Write Down Your Responses