அன்றைய மண்டைன் குழுத்தலைவர் இன்று மனித உரிமைக் காவலனா போட்டுடைக்கின்றார் டக்ளஸ்.
கடந்த 17ம் திகதி பாராளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது, பேசிய அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா நடந்து வந்த பாதை தன்னை திருப்பிப்பாராட எனும் புலிகளின் பாடல் பாணியில் சுமந்திரன் அவர்கள் தனது சகாக்களான பல தற்கொலைகளுக்கு காரண கர்த்தாக்களாக இருந்த சப்ரா கொள்ளையன் சரவணபவான் மற்றும் மண்டையன் குழுத்தலைவன் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோரின் வரலாற்றை திருப்பி பார்க்குமாறு வேண்டுதல் விடுத்தார்
அமைச்சரின் முழு உரை வருமாறு..
கௌரவ தலைவர் அவர்களே,
அரசாங்கத்தின் எட்டாவது வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தின் போது, எனக்கு உரையாற்றுவதற்குச் சந்தர்ப்பமளித்தமைக்கு முதலில் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளையிட்டு நான் ஆய்வுரை செய்வதற்கு முன்னர், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்து எமது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வியக்கத்தக்க சாதனைகள் பற்றி, குறிப்பாக எதிர்கட்சியினருக்கு அதிலும் விஷேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன்;. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலும் கூட, எல்.ரீ.ரீ.ஈ. யினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் அரசாங்கம் அபிவிருத்;தி வேலைகளை செய்து கொண்டிருந்தது என்பதனையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
2009 மே மாதம் யுத்தம் முடிவுற்றதில் இருந்து அரசாங்கம் புதிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. பாரிய அளவிலான மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தன் கண்ணிவெடியகற்றல் நடவடிக்கைகள் முடிவடையும் வரை அவர்களைத் தற்காலிக வதிவிடங்களில் தங்கவைத்து உணவளிக்க வேண்டியிருந்தது வடக்கின் உட்கட்டமைப்பு முழுவதும் மீள்நிர்மாணிக்கப்பட வேண்டியிருந்தது மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வீடுகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்க வேண்டியிருந்தது. இவற்றினை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருந்தது. நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த பெருந்தொகையினரான இடம்பெயர்ந்த மக்களுக்கு நலன்புரி சேவைகளை வழங்கிக் கொண்டிருந்த அதேவேளையில், அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் துணிச்சல்மிகு தலைமைத்துவத்தின் கீழ் பல்வேறு வேலைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சித் திட்டங்கள் யாவும் ஒட்டுமொத்தமாக 'வடக்கின் வசந்தம்' என அழைக்கப்படுகின்றன. அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தொலைநோக்கும், கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களின் செயற்பணியும் இல்லாதிருந்திருந்தால், வடமாகாணத்தின் அபிவிருத்தி, முன்னேற்றம், சுபீட்சம் ஆகிய சொற்கள் அகராதிக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட சொற்களாக இருந்திருக்கும்.
எனவே இக்குறுகிய மூன்று வருட காலத்தினுள் எமது அரசாங்கம், இடம்பெயர்ந்த மக்களை விரைந்து மீளக்குடியேற்றியது மாத்திரமல்லாது, பாதைகள், பாலங்கள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் ஆகியவற்றை நிர்மாணித்து வருவதோடு ஏனைய சகல உட்கட்டமைப்புகளான மின்சாரம், நீர்வழங்கல், மற்றும் இதர கட்டமைப்புக்களையும் நிர்மாணித்து வருகின்றதென்பதனையும் இவ்வுயரிய சபைக்கு நான் இன்று பெருமையுடன் கூறி வைக்க விரும்புகின்றேன். சுருங்கக் கூறின், 2009 மே மாதத்திலிருந்து வடமாகணத்தின் அபிவிருத்திக்காக, இவ்வருட இறுதிக்குள் முடிவுபெறவிருக்கும் வேலைத்திட்டங்கள் உள்ளடங்கலாக, ரூபா 123,304 மில்லியன் மூலதனச் செலவாக செலவிடப்பட்டுள்ளது. அதன் விபரமானது, ரூபா 29,224 மில்லியன் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் ரூபா 28,706 மில்லியன் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் ரூபா 28,119 மில்லியன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும், ரூபா 26,376 மில்லியன் வவுனியா மாவட்டத்திற்கும் ரூபா 10,879 மில்லியன் மன்னார் மாவட்டத்திற்கும் ஆகும். இது ஒரு வரலாற்று ரீதியான சாதனையாகும். கடந்த காலங்களில் இம் மாவட்டங்களின் அபிவிருத்திக்காக எந்தவொரு அரசாங்கமும் இத்தகையதொரு மிகப்பெரிய தொகையினைச் செலவளித்திருக்கவில்லை. இந்த மாவட்டங்களில் உள்ள மாவட்டச் செயலகங்களின் முன்னேற்ற அறிக்கைகள் எனது இக்;கூற்றுக்கு சான்று பகரும். இம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்களினால் இம் மாவட்டங்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்;கப்பட்டுள்ளதோடு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் அவை பங்களிப்புச் செய்துள்ளன.
இந்த வரவு செலவுத்திட்டம் இலங்கையில் வடபகுதியை முற்றாகப் புறந்தள்ளி வைத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இச்சபையில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மாகாண சபைகளுக்கான ஒதுக்கீட்டில் வடக்கிற்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதனை அவரால் அறியமுடியாமல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வருடத்திற்கென மாகாணசபைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மூலதனச் செலவீனம் ரூபா 14 பில்லியன் மாத்திரமே எனவும் அவர் மேலும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
கௌரவ தலைவர் அவர்களே,
2013 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளின் 246 மற்றும் 247 ஆம் பக்கங்களை இச்சபைக்கு சமர்ப்பிக்கின்றேன். மாகாண சபைகளுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளுக்கான இந்தப் பக்கங்களை மேலோட்டமாகப் பார்க்கும்போது, வரவு செலவுத் திட்ட மூலதன செலவீட்டுத் தொகையாக ரூபா 5.1 பில்லியன், மற்றும் 3.8 பில்லியன் ஆகியவை முறையே கிழக்கு மற்றும் வடமாகாணங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளன என்பதனை எவராலும் கண்டு கொள்ள முடியும். இம் மூலதன செலவீன ஒதுக்கீடுகள் ஏனைய சகல மாகாணங்களுக்கான ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடுகையில், மிகக்கூடிய தொகையாகவும்; இரண்டாவது மிகக்கூடிய தொகையாகவும் காணப்படுகின்றது. இது அரசாங்கத்தின் கொள்கையாகிய சமநிலைப்படுத்தப்பட்ட பிராந்திய அபிவிருத்தி மற்றும் இன்று வரை அபிவிருத்தி செய்யப்படாத பகுதிகளாகிய குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்தல் என்ற அரசின் கொள்கையினை மீள் வலியுறுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த உறுப்பினர் இவ்வாறானதொரு பொய்யான கூற்றை ஏன் கூறியுள்ளார் என எனக்குப் புரியவில்லை. இந்த உறுப்பினர் வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளவில்லையா அல்லது இச்சபையையும் அவரின் ஊடகத்தின் மூலம் வெளி உலகையும் தப்பான வழியில் இட்டுச் செலவதற்கு முயற்சிக்கின்றாரா என எனக்குப் புரியவில்லை.
அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்குபற்றி இருந்ததோடு, இம்மாவட்டங்களின் அபிவிருத்திக்கென இத்தகைய பெருந்தொகைப்பணம் செலவழிக்கப்பட்டிருப்பதையும் நன்கு அறிவார். அவர்கள்; தமிழ்ப் பத்திரிகைகளில் பிரசுரமாவதற்காகவே இங்கு உரையாற்றுகின்றனர். அவர்கள் அக்கிராசனத்தை நோக்கி உரையாற்றினாலும், கௌரவ தலைவர் அவர்களே, அவர்களின் முழுக்கவனமும் பார்வையாளர் கூடத்தில் உள்ள தமிழ் ஊடகங்களை நோக்கியதாக இருப்பதுடன் தமது தப்பான அரசியல் பிரச்சாரத்தை மேற்கொள்வதையே அவர்கள் மையப்படுத்திக் கொண்டுள்ளனர்.
கௌரவ தலைவர் அவர்களே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மீது மக்கள் நம்பிக்கையிழந்து விட்டனர் எனவும் அவர் பேசியுள்ளார். தற்போதைய உபவேந்தர் பதவியேற்ற பொழுது உலகத்தரப்படுத்தல் ஒழுங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 9,306 ஆவதாக இருந்தது. தற்போது அது அதே உலகத் தரப்படுத்தல் ஒழுங்கில் 5,662 ஆம் இடத்தில் உள்ளது என்பதனை நான் இச்சபைக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கையில் 9 ஆவது இடத்திலிருந்து இன்று 7ஆவது இடத்திற்குத் தரமுயர்ந்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றிலேயே இந்த பேராசரியரின் தலைமையின் கீழ்தான் முதன்முறையாக சர்வதேச ஆராய்ச்சி மாநாடு நடாத்தப்பட்டுள்ளது. இவை சாதனைகள் என்று கூற முடியாதவையா? பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்திய உபவேந்தரின் மீது மக்கள் நம்பிக்கையினை இழப்பார்களா?
தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உலகம் பூராகவும் பொய் உரைப்பது போல் இச்சபையிலும் பொய் பேசுகின்றனர். அதே பாராளுமன்ற உறுப்பினர் தான் பல தசாப்தங்களுக்கு முன்னர் அப்பாவி மக்களின் பணத்தை மோசடி செய்தவர். அவ் உறுப்பினர், தெற்கில் 'சக்விதி' (Sakvithi) என்ற நிதி நிறுவனத்தைப் போல் 'சப்ரா பினான்ஸ்' (Sabra Finance) எனும் பெயரில் மக்களை ஏமாற்றிய நிதி நிறுவனமொன்றுடன் தொடர்புடையவர். அந்நிறுவனத்தின் மோசடி செயற்பாட்டால் தமது வாழ்நாள் சேமிப்புகளை வைப்பிலிட்ட அனேகமான மக்கள் இறுதியாக தற்கொலை செய்துகொண்டனர். பெருமளவு அப்பாவி மக்களின் தற்கொலைகளுக்கு காரணமாகயிருந்த இவர் ஓர் கொலையாளியாக கணிக்கப்பட வேண்டியவர்; இவர் இன்று மனித உரிமைகளின் இரட்சகரைப் போல் இச்சபையில் உரையாற்றுகின்றார். இவ்வாறு மோசடி செய்யப்பட்ட பணத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் அவர்கள் ஆரம்ப்பித்த தினசரிப் பத்திரிகை தான் எல்.ரீ.ரீ.ஈ யினரின் அழிவுச் செயற்பாடுகளில் இளைஞர், யுவதிகள் இணைந்து கொள்வதற்கு உற்சாகமளித்ததோடு, இறுதியில் அவர்களின் மரணம் வரை செல்வதற்கும் பொறுப்பாக இருந்தது. அந்தப் பத்திரிகை இன்றும் ஊத்தையன் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கின்றது. இப்பத்திரிகை தமிழ் மக்களின் சாபக்கேடு ஆகும்.
கௌரவ தலைவர் அவர்களே, எல்.ரீ.ரீ.ஈ யினரும் அவர்களைச் சார்ந்தவர்களும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எவற்றை எல்லாம் அழித்தார்களோ, அவற்றையெல்லாம் மூன்று முதல் ஐந்து வருட கால எல்லைக்குள் புனர் நிர்மாணம் செய்யும் முயற்சிகளில் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இத்தகைய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை தமிழத்; தேசிய கூட்டமைப்பு சக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் தெரியவில்லை என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. எமது நாட்டின் வரலாற்றில் என்றும் எதிர்பார்த்திராத அளவில் மேற்கொள்ளப்படுகின்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும், நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளையும் தங்கள் கபடத்தனமான அரசியல் வார்த்தைகளால் முட்டுக்கட்டை போட வேண்டாமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன். முன்னர் அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினரே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என கூறியிருந்தனர்.
அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினரின் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தூண்டியதோடு மாத்திரமல்லாது மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவளித்து வந்துள்ளனர். தமது சொந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களான அமிர்தலிங்கம், கலாநிதி நீலன் திருச்செல்வம், தங்கத்துரை, பத்மநாபா, ஸ்ரீசபாரட்ணம் மற்றும் ஏனையோர் எல.;ரீ.ரீ.ஈ யினரால் கொலை செய்யப்பட்ட போதும் கூட அவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. அவர்களுக்குத் தைரியம் இருக்குமானால் எல்.ரீ.ரீ.ஈ யினரே தமது தலைவர்களைக் கொலை செய்தார்கள் என்று எழுந்து நின்று கூறட்டும்?
அவர்கள் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்திற்குச் சென்று இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. ஹிலாரி கிளிண்டன் அவர்களைச் சந்தித்து, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு அமெரிக்க மக்களின் உதவியை நாடப்போவதாக கடந்த வருடம் கூறியிருந்தனர். அண்மையில் தமிழ் மக்களின் அரசியல் விடயங்களுக்குத் தீர்வு காண்பதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு இந்திய விஜயத்தை மேற்கொள்வதாகக் கூறியிருந்தனர். கடந்த காலங்களிலும் இதேபோன்ற செயற்பாடுகளைத்தான் அவர்கள் செய்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்களை சர்வகட்சி மாநாட்டுக் குழுவில் பங்கேற்கும்படி அரசாங்கம் அழைப்புவிடுத்த போது அதனை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். சகல அரசியல் கட்சிகளினதும் சம்மதத்துடன் தீர்வொன்றைக் காண்பதற்கு பாராளுமன்ற தெரிகுழுவில் பங்கு பற்றும் வண்ணம் அரசாங்கம் அவர்களை கேட்டுக் கொண்ட போது, அத் தெரிவுக்குழுவிற்கு பெயர் குறித்து நியமனம் செய்வதற்கு பதிலாக உலகம் பூராகவும் பயணம் செய்து சர்வதேச சமூகத்திற்கு பொய்யான கூற்றுக்களையும் தவறான தகவல்களையும் பரப்புரை செய்து வருகின்றனர். உண்மையில் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பங்களைச் சந்திப்பதற்கேயாகும்.
அத்துடன் அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களின் போது தமது பொய்ப் பிரச்சார நடவடிக்கைகளுக்காக புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்து பணம் வசூலித்தும் வருகின்றனர். தாமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும் அரசாங்கம் தம்மிடம் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டுமென்றும் அவர்கள் கூறி வருகின்றனர். பிரபாகரனின் மனோநிலைக்கும் இவர்களின் மனோநிலைக்கும் இடையில் நான் எவ்வித வேறுபாட்டையும் காணவில்லை அவ்வாறு தான் அவரும் கூறியிருந்தார்.
அவர்கள் கிடைக்கப்பெறும் சந்தர்ப்பங்களை எப்போதும் உபயோகப்படுத்திக் கொள்வது கிடையாது. ஆனால் தொடர்ந்து வரும் அரசாங்கங்களின் மீது குற்றங்களைச் சுமத்தி வருகின்றனர். 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முற்றாக நடைமுறைப்படுத்துவில் ஆரம்பித்தது படிப்படியாக அதனை செழுமைப்படுத்த வேண்டுமென பல தசாப்தங்களுக்கு முன்னர் நாங்கள் கூறியபோது, தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்கள் அது ஓர் உழுத்துப் போன தீர்வு என்றும், காலம் கடந்த தீர்வு என்றும் அதனைக் குப்பைத் தொட்டிக்குள் போடும் படியும் நகைப்புச் செய்தனர். இன்று தங்கள் குப்பைத் தொட்டியிலிருந்து அதனை மீண்டும் பொறுக்கி எடுத்து நாங்கள் பல தசாப்பதங்களாக கூறி வந்த அதே தீர்வுத் திட்டத்தைப் பற்றி அவர்களின் சட்டமேதை அரசியல் தீர்வாக கூறுகின்றார்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர், சுமந்திரன் அவர்கள் அண்மையில் இணையத்தளம் ஒன்றிக்கு எழுதியிருந்த கட்டுரையிலிருந்து சிறு பகுதியை இங்கு நான் வாசிக்க விரும்புகின்றேன்.
'13 ஆவது அரசியலமைப்புத்திருத்தம் செழுமைப்படுத்தப்பட்டு யாதார்த்த பூர்வமாக அதனை மாற்றியமைக்கலாம். அதில் காணப்படும் சில அடிப்படை அம்சங்களை மீண்டும் ஆராயவேண்டிய அவசியமில்லை. எனினும், அதற்கு முன்னர் அதில் உள்ள இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்'.
கௌரவ சுமந்திரன் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஏனெனில் கடந்த காலத்தில் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் கூறியவற்றினை கௌரவ உறுப்பினர் அறிந்திருக்க மாட்டார். ஏனெனில் அவர் அரசியலிற்கு பின்புற நுழைவாயிலினூடாக மிக அண்மையில இணைத்துக் கொள்ளப்பட்டவர்.
அண்மையில் கௌரவ சுமந்திரன் அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது இரு குற்றவாளிகள் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவரினால் குறிப்பிடப்பட்ட அக் குற்றவாளிகளிகளில்; ஒருவர் 'சப்ரா' எனும் பெயரில் இயங்கிய நிதிக்கம்பனி மூலம் அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் தற்கொலைக்குப் பொறுப்பாக இருந்ததோடு, தனது ஊடகத்தின் பிரச்சாரங்களின் மூலம் இளைஞர், யுவதிகளை உணர்வூட்டி எல்.ரீ.ரீ.ஈ யினருடன் இணைந்து செயற்படுவதற்கு வழிவகுத்தவர். இறுதியில் அவ் இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். கௌரவ சுமந்திரன் அவர்களால் குறித்துரைக்கப்பட்ட மற்றைய குற்றவாளி, எனது ஊகத்தின் படி, தற்போதைய மனித உரிமைகளின் பாதுகாவலனும் முன்னைநாள் 'மண்டையன் குழுவின்'; தலைவருமாக இருந்த நபராக இருக்க வேண்டும்.
2009 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பிரபாகரனைப் பாதுகாப்பதற்காக அப்பாவிப் பொதுமக்களை மனித கேடயமாகப் பாவிப்பதற்குப் பொறுப்பாகவிருந்தவர் இன்னுமொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவர். அவர் தனது தலைவரைப் பாதுகாக்கும் பொருட்டு பொதுமக்களை முள்ளிவாய்க்கால் வரை வலுக்கட்டாயமாக நகரச் செய்து ஈற்றில் அவர்களைப் பலி கொடுத்தவர். ஆனால், அவர் தனது குடும்பத்தினரை இலங்கை செஞ்சிலுவைச் சங்க வாகனத்தின் மூலம் நேரகாலத்தோடு வன்னிப் பிரதேசத்தை விட்டு வெளியேற்றிவிட்டார். அதன் பின்பு அவரும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க வாகனத்தின் மூலம் தப்பிச் சென்று விட்டார். அவ்வாறு இரகசியமாகத் தப்பிச் செல்லும் போது பெருமளவு களவு எடுத்த பணத்தையும், எடுத்துச் சென்றது மட்டுமல்லாமல் அப் பணத்தை மீண்டும் தமிழ் மக்களை அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதற்கான ஊடகப் பிரச்சாரத்திற்காக தற்சமயம் செலவளித்து வருகின்றார். அவர்கள் மற்றவர்களை கஸ்டத்திற்கு உள்ளாக்கி அதில் தாங்கள் வாழப் பழகிக் கொண்டவர்கள்.
பிறர் மீது சேறு பூசுவதற்கு முன்னர் தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பழைய வரலாறுகளை புரட்டிப் பார்க்கும்படி கௌரவ சுமந்திரன் அவர்களிடம் நான் வேண்டிக்கொள்ள விரும்புகின்றேன். நேரக் கட்டுப்பாடு இல்லாதிருக்குமேயாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களின் பழைய வரலாறுகள் தொடர்பாகவும் என்னால் பல விடயங்கள் எடுத்துச் சொல்ல முடியும். எனது நேர்மையான அரசியல் வரலாறு காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை விட மிக அதிகளவு விருப்பு வாக்குகள் மூலம் மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதே காரணத்திற்காகவே 1994 ஆம் ஆண்டிலிருந்து இற்றவரை மக்கள் என்னை தொடர்ச்சியாகப் பாராளுமன்றத்திற்குத் தேர்தெடுத்து வருகின்றனர்.
காலஞ்சென்ற சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார், காலஞ்சென்ற கௌரவ காமினி திஸாநாயக்க ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களில், மங்கள முணசிங்க ஆணைக்குழு அறிக்கை, 1995 ஆம்,1997 ஆம், மற்றும் 2000 ஆண்டுகளின் முன்மொழிவு வரைகள், சர்வகட்சி மாநாட்டு (APRC) நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்குமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை (LLRC) ஆகியனவற்றில் அதிகாரப்பரவலாக்கல் தொடர்பான எண்ணக்கரு எவ்வாறு பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றது என்பதனை கௌரவ சம்பந்தன் அவர்கள் தனது உரையின் போது நேற்றைய முன்தினம் இச்சபையில் மிகத் தெளிவான முறையில் சமர்ப்பித்திருந்தார்.
2000 ஆம் ஆண்டின் முன்மொழிவு வரை தொடர்பாக கௌரவ உறுப்பினர் தனது உரையில் குறிப்பிட்டதனை நான் இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
'1995,1997,2000 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முன்மொழிவு வரைபுகள் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை விட பலமடங்கு அப்பாற் சென்றுள்ளது'
ஆயினும், கௌரவ உறுப்பினர் அவர்கள் இவ்விடயம் தொடர்பாக முக்கியமானதொரு உண்மையை சபைக்குத் தெரிவிக்க தவறிவிட்டார். கௌரவ உறுப்பினரால் குறிப்பிட்டது போல் 2000 ஆம் ஆண்டின் முன்மொழிவு 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கப்பாற் சென்றுள்ளதெனில், இறுதியாக அந்த முன்மொழிவு அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட போது அதனை இச் சபையில் எரிப்பதற்கு தமிழர் விடுதலை கூட்டணி (TULF) உறுப்பினர்கள்; ஏன் காரணகர்த்தாவாக இருந்தனர்? அது 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்க முன்னேற்றகரமானதாக இருப்பின், நாம் அதனை ஏன் இழக்க நேரிட்டது? இம் முன்மொழிவிற்குச் சாவுமணி அடிப்பதற்கு பொறுப்பாக இருந்தவர்கள் யார்? இத்தகைய ஈடு செய்ய முடியாத இழப்பினை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியமைக்குப்; யார் காரணம்? அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்துவதற்கான மனஉறுதி, திடசங்கற்பம் எம்மிடம் இல்லாமல் இருக்கும் போது அரசாங்கங்களை குற்றம் சாடுவதில் பிரயோசனம் யாது?
இலண்டனில் நடைபெற்ற நினைவுதினக் கூட்டமொன்றில், எல்.ரீ.ரீ.ஈ யின் கொள்கை வகுப்பாளர் அன்ரன் பாலசிங்கம், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நல்ல விடயங்களை உள்ளடக்கியுள்ளது என ஒரு தடவை கூறியிருந்தார். இன்று கௌரவ சம்பந்தன் அவர்கள் அர்த்தபூர்மான அதிகாரப் பரவலை ஏற்படுத்த வேண்டுமாயின் 13 ஆவது திருத்தச் சட்டம் மேலும் செழுமைப்படுத்தப்பட வேண்டுமெனக் கூறுகின்றார். அவ்வாறாயின் 2000 ஆம் ஆண்டின் முன்மொழிவு வரைவுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வேளையில் அவர்கள் அதனை ஆதரித்து இருக்க வேண்டும்;; அதில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் அவற்றை பின்னர் நிவர்த்தி செய்திருக்கலாம். சர்வகட்சி மகாநாட்டுக் குழு (APRC) மற்றும் கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஜனாதிபதி ஆணைக்குழு (LLRC) ஆகியவைபற்றி அவர் புகழாரம் சூட்டினார். ஆனால் இக்குழுக்களில் பங்குபற்றும்படி அவர்களைக் கேட்டுக் கொண்ட போது, இந்த ஆணைக்குழுக்கள் எவ்வித உண்மையான தீர்வுகளையும் பெற்றுக் கொடுக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கையில்லை எனக்கூறி அவற்றில் பங்கேற்க மறுத்துவிட்டனர். இவர்கள் உண்மையிலேயே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அவசியமெனக் கருதியிருந்தால், இந்தக் கூட்டத் தொடர்களில் பங்கு பற்றியிருந்திருக்க வேண்டும். அவர்கள் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதனை அவர்கள் விரும்பவில்லை; பதிலாக அந்தப் பிரச்சினைகளை வைத்து அவர்கள் தங்கள் அரசியலை நடாத்திக் கொண்டிருக்க விரும்புகின்றனர்.
இச்சந்தர்ப்பத்திலே நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம், குறிப்பாக மூத்த அரசியல்வாதியும் நீண்டநாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய அதன் தலைவர் கௌரவ சம்பந்தன் அவர்களிடம் வேண்டிக் கொள்ள விரும்புகின்றேன், தமிழ் மக்களின் இந்த நீண்ட கால அரசியல் பிரச்சினைக்களுக்குத் தீர்வு காண்பதில் உண்மையிலேயே நீங்கள் அக்கறை கொண்டவர்களாக இருப்பின், அதி உத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வழங்கப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பமான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவதன் மூலம் அதனைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் முன்வர வேண்டும். முன்னைய சந்தர்ப்பங்களைப் போல் அன்றி, இம்முறை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாகத் தெளிவான வழிகாட்டல்களையும் அதற்கான கால எல்லையையும் வரையறுத்துள்ளார்.
கௌரவ தலைவர் அவர்களே,
எமது அரசாங்கத்தின் அபிவிருத்தி தொடர்பான முன்னெடுப்புகள், மீள்குடியேற்றம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவற்றுடன் மட்டும் மட்டுப் படுத்தப்பட்டவொன்றல்ல. அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சிந்தனையில் உதித்து கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டிலில் நெறிப்படுத்தப்படும் 'வாழ்வின் எழுச்சி'(திவிநெகும) திட்டமானது வீட்டுப் பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டும் ஒரு வேலைத்திட்டமாகும். இத்திட்டங்களின் கீழ் வட பகுதி மக்களே பெரும் பயனைப் பெறுகின்றனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் ஏறத்தாழ 55,000 குடும்பங்கள் இந்நிகழ்ச்சித் திட்டங்களின் கீழ் நேரடியாகப் பயன்பெறுகின்றன. வடக்கில் உள்ள ஏனைய மாவட்டங்களில், அம் மாவட்டங்களின் சனத்தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் இதன் மூலம் பயன்பெறுகின்றனர்.
வாழ்வின் எழுச்சி (திவிநெகும) மற்றும் சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஒன்றிணைத்து திணைக்களமாக மாற்றுவதற்கான சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் அண்மையில் முயற்சிசெய்த போது, அச்சட்டமூலத்தின் சில வாசகங்கள் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு முரணாக உள்ளன என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் அரசியல் ஏற்புடைமை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
13 வது அரசியலமைப்புத் திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்;துவதில் ஆரம்பித்து அதன் பின்னர் மேலும் செழுமைப்படுத்துவதே தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மிகச்சிறந்த வழியென நான் பிரதிநித்துவப்படுத்தும் கட்சி பல தசாப்பதங்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்துள்ளது. எனது கட்சியின் இந்நிலைப்பாட்டில் நாம் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவே இருந்து வந்துள்ளோம், தொடர்ந்தும் இருப்போம். அதிகாரப் பகிர்வினை மக்களுக்கு அர்த்தமுள்ளதாக்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தனது வரவு செலவுத்திட்ட உரையில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.
அதேவேளை, வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்ட மூலம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது 'ஊசி செல்கின்ற இடம் பார்ப்பார் ஆனால் உலக்கை செல்கின்ற இடம் பாரார்' எனும் பழமொழிக்கு இணங்க நாங்கள் செயற்பட முடியாது. 13 வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாகவும் அதிகாரப் பகிர்வினை மேலும் செழுமைப்படுத்துவது தொடர்பாகவும், நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், நாம் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களை நழுவவிட்டுள்ளோம். அதேவேளை 13 வது அரசியல் திருத்தத்தின் சில முக்கியமற்ற சரத்துக்களை பாதுகாத்தல் என்ற கோதாவில் மிக வறிய மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய தேசிய ரீதியிலான நிகழ்ச்சித் திட்டமொன்றினை தடை செய்வதற்கு நாங்கள் முயற்சித்து கொண்டிருக்கின்றோம். இதனை சிறந்த முறையில் தமிழில் விபரிப்பதாயின் 'முட்டையில் மயிர்பிடுங்குவது' போலாகும்.
இந்த உயரிய சபையிலே நான் மீண்டும் வலியுறுத்திக் கூறவிரும்புவது, அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழ் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு யதார்த்தமானதொரு தீர்வினை எம்மால் காணமுடியும். அந்நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
இத்துடன் எனது உரையை முடித்துக் கொள்கின்றேன் ஐயா
நன்றி
0 comments
Write Down Your Responses