புலிகளை அழித்தது போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அழிக்க வேண்டும் - உதய கம்மன்பில
விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்தது போல் அதன் அரசியல் பிரிவையும் அழிக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அந்த அமைப்பின் அரசியல் பிரிவை அழிக்காததால் ஏற்பட்டுள்ள பின் விளைவுகளை தற்பொழுது அனுபவிக்க நேர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆயுதப் போராட்டத்தில் அடைய முடியாத நோக்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் இராஜதந்திர ரீதியாக அடைய முயற்சித்து வருகிறது. இதன் முடிவுகள் நாட்டை நெருக்கடியான நிலைமைக்குள் கொண்டு செல்லும்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாம். அதற்கான காலம் வரவில்லை என்று நாங்கள் ஆறு மாதத்திற்கு முன்னர் தெரிவித்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் என்ன? அது விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு. அந்தக் காலத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிளிநொச்சி வருமாறு உத்தரவிடுவார். இந்த பூனைக்குட்டிகள் அங்கு செல்லும். தமிழ்ச் செல்வன் தலைமை நாற்காலியில் அமர்ந்திருப்பார்.
சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் பக்கத்தில் பூனைக்குட்டிகளைப் போல் அமர்ந்திருப்பர். தமிழ்ச் செல்வன் உத்தரவுகளைக் கொடுத்த பின்னர் அதனை இவர்கள் அமுல்படுத்துவர். இராணுவம் விடுதலைப்புலிகள் அமைப்பை யுத்த ரீதியாகத் தோற்கடித்தது. யுத்த ரீதியாக ஒரு பிரிவைத் தோற்கடித்த பிறகு அதன் அரசியல் பிரிவையும் தடை செய்வது உலக முழுவதும் நடந்துள்ளது. 1945 ஆம் ஆண்டு ஹிட்லர் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இன்று வரை அவரது நாஜி கட்சி ஜெர்மனியில் தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியின் முசோலினி அதே ஆண்டில் தோற்கடிக்கப்பட்டதுடன் அவரது கட்சியும் தடை செய்யப்பட்டது. அதேபோல் தலிபான் தோற்கடிக்கப்பட்டதும் ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு தடை செய்யப்பட்டது. 2003 ஆம் ஆண்டு ஈராக்கில் சதாம் உசேனின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. இன்றும் ஈராக்கில் அவரது பாத் கட்சி தடை செய்யப்பட்ட கட்சியாக உள்ளது. லிபியாவில் முஹம்மர் கடாபியின் கட்சி தடை செய்யப்பட்டுள்ளது. ஆயுத சக்தி அல்லது சர்வாதிகார சக்தியைத் தோற்கடித்த பிறகு அதன் அரசியல் பிரிவையும் அழிக்க வேண்டியது அத்தியாவசியமானது. நாங்கள் அந்தக் காலத்தில் இதனைச் செய்யுமாறு கூறினோம். புலிக்குட்டியை விட்டு வைக்க வேண்டாம் என நாம் கூறினோம். புலிக்குட்டி வளர்ந்ததும் உறுமவும் கடிக்கவும் ஆரம்பிக்கும் என்று நாங்கள் சொன்னோம். தற்பொழுது பிரச்சினை ஆரம்பமாகி விட்டது என்றார்.
0 comments
Write Down Your Responses