றிஸ்வி முஃப்தியை நோக்கி... ஹைதர் அலி அல்-ஹலீமி
திசைமாறிய பிறை பிரச்சினையும்,அறியவேண்டிய உண்மைகளும்!
ஆனால் பிறை பார்க்கும் விவகாரம் அல்லது அதன் உத்தியோகபூர்வ முடிவை அறிவிக்கும் விடயம் அ.இ.ஜ.உ வை மாத்திரம் சார்திருப்பதாக விமர்சகர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்களா? அல்லது வேண்டுமென்றே றிஸ்வி மு.தி அவர்களையே குறிவைத்து விமர்சனங்கள் செய்கிறார்களா என சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் அ.இ.ஜ.உ வையும் தாண்டி றிஸ்வி முஃப்தி அவர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறார் என்பதாகவே விமர்சனம் செய்த சகலரும் சித்தரித்திருக்கின்றனர். இது ஒரு தவறான கண்ணோட்டமாகும்.
அதாவது பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் பிறை மாநாட்டில் சரிசமமான பங்குதாரரர்களாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு,இலங்கை அரசாங்கத்தின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் , அ.இ.ஜ.உ வுடன் மற்றும் பல முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் என்று பட்டியலிட்டுச்சொல்லலாம். விடயம் இவ்வாறு இருக்கும் போது ஏன் றிஸ்வி முஃதியை மாத்திரம் இலக்காகக்கொண்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும்? குறிப்பிடப்பட்ட மூன்று தரத்தாரும் பதில் சொல்லவேண்டிய இடத்தில் ஏன் ஜம்இய்யா மாத்திரம் பதில் சொல்ல நேர்ந்தது? அதற்கான காரணங்கள் என்ன? என்பதை அலசி ஆராய கடமைப்பட்டிருக்கிறோம்.
குறிப்பிட்ட விவகாரத்தில் தனிமனித விமர்சனங்களுக்கு பிரதான மூன்று காரணங்கள் இருக்கின்றன.
1. வானொலி நிகழ்ச்சி.
2. பொறாமை.
3. தப்பெண்ணம்.
(1)வானொலி நிகழ்ச்சி:
குறிப்பிட்ட பிரச்சினைக்கு ஜம்இய்யத்துல் உலமா மாத்திரம் பதிலளிக்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு,மு.ச.அ.ப திணைக்களம் உற்பட மற்ற ஏணைய உறுப்பினர்களும் சேர்ந்தே பதில் அளித்திருக்க வேண்டும். கூட்டாக முடிவெடுத்து விட்டு அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது மிகப் பெரிய அநியாயமாகும். இதை விட ஒரு முக்கிய விடயம் யாதெனில் இது வரை கூட்டாக சேர்ந்து முடிவெடுத்த ஏனைய அமைப்பினர்கள் எவரும் ஒரு வார்த்தையேனும் வாய் திறந்து பேசவில்லை என்பது இங்கு கவலையுடன் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
உண்மையில் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையில் சில முரண்பாடுகள் இருந்த போதிலும் பெரும்பான்மையான மக்களுக்கு அது பிறை முடிவு பற்றிய சரியான விளக்கம் கிடைத்தது. ஆனாலும் அவ்விளக்கவுரை காலதாமதமானது கவலைக்குரியது என பலரும் என்னுடன் தொடர்பு கொண்டு கதைத்தனர். ஏனெனில் இந்த விளக்கம் ஸஹருக்கு முன்பு கொடுக்கப்பட்;டிருந்தால் பலருடைய நோன்பு கழாவாக ஆகியிருக்க மாட்டாது எனவும் மனவருத்தப்பட்டனர்.
இதுபற்றி தமது நிலைபாட்டை விளக்கிய இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் கௌரவ அமீர் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் குறிப்பிடும் போது:
பிறை விடயத்தில் இத்தகையதொரு தெளிவான விளக்கம் சமூகத்திற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் வியாழன் பிற்பகல் ஒரு மணிக்குத் தான் சமூகத்திற்குப் பிறை தொடர்பான இத்தகையதொரு விளக்கம் கிடைக்கிறது முக்கால் நாள் சமூகம் விளக்கமின்றி குழப்பத்தில் சிக்கித்தவித்ததன் பின்னர்...விளக்கம் சொல்ல வேண்டியவர்கள் அதுவரை சமூகத்தை அதன் போக்கில் விட்டிருந்தார்களோ அல்லது சமூகம் விளக்கமின்றியே கட்டுப்படுமென்று எதிர்பார்த்தார்களோ தெரியவில்லை. சமூகத்தை யார் யாரோ வழிநடாத்தி தீர்மானங்களை எடுத்து கருமமாற்றி முடிந்ததன் பிறகு... பெருநாள் கொண்டாடியவர்கள் பெருநாள் கொண்டாடியதன் பிறகு... நோன்பை விட்டவர்கள் நோன்பை விட்டதன் பிறகு... விமர்சனங்கள் செய்தவர்கள் முடிந்தமட்டும் விமர்சனம் செய்த பிறகு சமூகத்திற்கு விளக்கம் கிடைத்தது எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதாவது பிறைக்குழவின் முடிவு சரியாக இருந்தாலும் இதுபற்றிய சரியான விளக்கத்தை மக்களுக்கு சரியான நேரத்தில் வழங்கவில்லை என்பதே இவரின் குற்றச்சாட்டு. இதுவொரு ஆரோக்கியமான கருத்து என நானும் நினைக்கிறேன். அதாவது ஏன் பலரின் சாட்சிகளை மறுத்தார்கள்? பிறை பற்றிய அ.இ.ஜ.உ வின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி மக்களுக்கு சரியாக போய் சேரவில்லை. அன்று உரையில் தலைவர் அவர்கள் குறிப்பிட்ட போது தான் இதுபற்றி பலரும் அறிந்து கொண்டனர்.
மேலும் தலைவர் அவர்களின் உரையில்சில கடுமையான வார்த்தைகளும் வெளிப்பட்டன. இதுவும் சிலவேலை மக்களின் உள்ளங்களைப் பாதித்திருக்கும் என்பது உண்மை. இது அவரின் கவலையின் வெளிப்பாடாகவே இருந்திருக்குமே தவிர வேரில்லை. ஆனாலும் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.
(2) பொறாமை:
எல்லோரும் இல்லாவிட்டாலும் பலர் இவர்மீது பொறாமை கொண்டுள்ளனர் என்பது நான் இவர்களோடு மிக நெருக்கமாக இருப்பவன் என்ற வகையில் எனக்கு உறுதியாகக்கூற முடியும். அவருக்குரிய செல்வாக்கு, கௌரவம், மக்கள் ஆதரவு என்பவற்றையெல்லாம் வைத்தே இவ்வாறு இவர் மீது சிலர் சீரிப்பாய்கின்றனர். இதற்கு ஒரேயொரு நிகழ்வை மட்டும் நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது 2010 ஆம் ஆண்டு ஜோர்தான் நாட்டின் ரோயல் இஸலாமிய தந்திரோப கற்கை நிலையம் (வுhந 500 ஆழளவ ஐகெடரநவெயைட ஆரளடiஅள)“உலக முஸ்லிம்களில் செல்வாக்குமிக்க முதல் 500 பேர்கள்” என்ற கருத்துக் கணிப்பீட்டில் உஸ்தாத் றிஸ்வி முஃப்தி அவர்கள் தெரிவு செய்யப்பட்ட செய்தி பல இணையங்களில் வெளியானது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் அவர் ஒரு தலைவர் என்றல்ல ஒரு சாதாரண இலங்கை முஸ்லிம் என்ற பிரஜை என்ற வகையில் நாம் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். மாறாக இதுபற்றி எமது சகோதரர்களின் இணையதள அடிக்குறிப்புக்களும், கருத்துக்களும் மிக மோசமாகவே இருந்தன. “எமது நாட்டில் வேறு அறிஞர்கள் இல்லையா? இவர் மட்டும் தான் செல்வாக்குமிக்கவரா” என்றெல்லாம் எழுதி தமது பொறாமைகளை வெளிப்படுத்தி இருந்தனர். இதுவல்லாமல் இன்னும் பல மோசமான வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தனர். இவையெல்லாம் பொறாமையின் வெளிப்பாடு இல்லையா? நாம் எந்த இயக்கத்தைச் சார்ந்தாலும் அவரும் ஒரு முஸ்லிம் சகோதரர் என்றல்லவா நாம் எண்ணியிருக்க வேண்டும்.
(3) தப்பெண்ணம்:
முப்ஃதி பற்றிய ஒரு தவறான கண்ணோட்டம் எல்லோரிடமும் இருக்கிறது. அதாவது“பெருமை பிடித்தவர்”“கண்டால் கதைக்க மாட்டார்”“எல்லோருடனும் சரிசமமாகப் பேசுவதில்லை”“செல்வந்தர்களோடு தான் அவருடைய நட்பு” என்பவையே அவைகளில் பிரதானமானவையாகும்.
உண்மையில் நான் எனது சிறுபிராயம் முதல் அவர்களுடன்; நெருங்கி இருக்கும் ஒருவன். ஓவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ{தஆலா இயற்கையாகவே சில குணாம்சங்களை வைத்துள்ளான். அதே வகைக் இயல்பு தான் இவரிடத்திலும் இருக்கிறது. வெளித்தோற்றத்தை பார்த்தால் மேற்படி எல்லாக் குணங்களும் அவரிடத்தில் இருப்பது போலவே தோன்றும். ஆனால் நெருங்கிப் பழுகும் போது தான் அவருடைய உள்ளத்தில் சமூகம் பற்றி என்ன எண்ணம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.பலபோது ஒவ்வொரு ஆலிம்களதும், பொது மகன்களதும் வாழ்க்கை நிலை பற்றி விசாரிப்பார். உலமாக்களுக்கு மஸ்ஜித்களிலும், மத்ரஸாக்களிலும் இருக்கும் பிரச்சினைகள் பற்றியும் அவர்களது பொருளாதார நிலை பற்றியும் கவலைப்படுவார்.நாட்டு மக்களது பிரச்சினைகள், துன்பங்களின் போதும் பெரிதும் பங்குகொள்ள வேண்டுமென தம்மை ஈடுபடுத்திக்கொள்பவர்களில் முக்கியமானர். செல்வந்தர்களின் சகவாசம் இதுபோன்றவைகளுக்கே பயன்படுகின்றன தவிர சுய லாபங்களுக்காக அல்ல. இந்த சகவாசத்தின் மூலம் இவர் எந்தவொரு சுயலாபமும் பெற்றதும் கிடையாது. இதனை இவருடைய பிள்ளைகளின் திருமணத்தின் மூலமே முழு நாடும் அறிந்திருக்கும் என நினைக்கிறேன். தனது மகளினதும், மகனினதும் சம்மந்தத்தை உலக அடிப்டையில் சாதாரண ஒரு குடும்பத்தோடு தான் செய்துகொண்டார். பணக்காரர்கள் கைகட்டி வரிசையில் நின்றும் இவர் அதற்கு விரும்பவில்லை என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
தமது பதவியை வைத்து பெருமையடிப்பதையோ அல்லது பிரபல்யம் தேடுவதையோ இவர் மிகவும் வெறுப்பவர். குறைந்தது தாம் ஒரு போட்டோவுக்காவது போஸ் கொடுப்பதை வெறுப்பவர். தொலைக் காட்சி நிறுவனங்கள் பல பேட்டிகளுக்காகவோ அல்லது நிகழ்ச்சிகளுக்காகவோ அழைப்பு விடுத்தால் அதனையும் மறுத்து விடுவார். எந்த இடத்திலும் தமது பெயர் வரக்கூடாது எனச்சொல்லுவார். நான் ஜம்இய்யாவில் ஊடக உத்தியோகத்தராக பணியாற்றிய பொழுது இவைகளையெல்லாம் நேரடியாகக் கன்டவன். எப்பொழுது ஹலால் பிரச்சினை வந்ததோ அப்பொழுதே நிர்பந்தமாக மீடியாக்களில் காட்சியளித்தார்.
இவைகளைவிட ஒருபடி மேலாக (மறைந்திருந்திருக்கும்) ஒரு உண்மையை என்னால் கூறாமல் இருக்க முடியாது. சிலபோது இதனை அவர் படித்தால் என்னைக் கோபிக்கவும் சந்தர்ப்பம் இருக்கிறது. (என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்) இத்தருணத்தில் நான் இதனைச் சொல்லாவிட்டால் சில வேலை குற்றவாளியாகக் கூட ஆகிவிடலாம். அதாவது இவருடைய மேற்பர்வையில் இந்நாட்டில் மிகத்தேவையான இடங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மஸ்ஜித்கள் கட்டப்பட்டிருக்கின்றன. தேவையான இடங்களுக்கு ஆளனுப்பி தேவையை அறிந்து இவைகள் செய்யப்பட்டிருக்கின்றன. புகழ் விரும்பியாக இருந்தால் என்னவெல்லாம் செய்திருக்கலாம். எங்கேயாவது ஒரேயொரு “பெனரையோ” அல்லது பெயர்ப்பலகையோ காணமுடியுமா?
இதைவிட இரகசியமாக அவர்கள் செய்த இன்னும் செய்துகொண்டிருக்கின்ற பல நல்லவைகளை இங்கு குறிப்பிட்டுக்காட்ட முடியாது.
பாதிப்புமுஃப்திக்கு அல்ல ஜம்இய்யாவுக்கே!
ஜம்இய்யத்துல் உலமா என்பது முஃப்தி அவர்களின் ஏகபோக சொத்தல்ல. அது இந்நாட்டு 6000 க்கும் மேற்பட்ட உலமாக்களினதும், பொது மக்களினதும் சொத்தாகும். இவ்வாறான சந்தர்ப்ப சூழ்நிலைகளில் ஒரு தனிமனிதன் என்ற வகையில் முஃப்தி அவர்கள் விமர்சிக்கப்பட்டாலும் அந்த விமர்சனங்களால் பாதிக்கப்படப்போவது நாம் எல்லோரும் கட்டிக்காக்க வேண்டிய ஜம்இய்யா தான்.யார் என்ன சொன்னபோதிலும் முஸ்லிம்களுக்கென இருக்கும் ஒரேயொரு தலைமை இப்போதைக்கு இது மாத்திரம் தான். இதனையும் நாம் இழக்க முற்படுவோமேயானால் எமது எதிர்காலம் என்னவாகும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஆலிம்களை மதிக்கும் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வோம்!
பொதுவாக ஆலிம்களின் அந்தஸ்தை நாம் அறிய வேண்டும் என்பதற்காக இவைகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன். ஆலிம்கள் என்பவர்கள் நபிமார்களின் வாரிசுகள். அல்லாஹ{தஆலா இவர்களுக்கு நபிமார்களுக்கு அடுத்துள்ள அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறான் என்பதை நாம் எல்லோரும் மனதில் பதிய வைக்க வேண்டும். இணையதளங்களிலும், முகநூல் பதிவுகளிலும் எப்படியெல்லாம் உலமாக்களைத் திட்டி இருக்கிறார்கள். படுமோசமான வார்த்தைகளைக் கொண்டு ஜம்இய்யத்துல் உலமாவை விமர்சித்திருக்கிறார்கள். உலமாக்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் எனக் கூறவில்லை. ஆனாலும் எதிலும் எல்லை மீறாது நடந்துகொள்ள வேண்டும்.
ஆகவே கீழ்வரும் வார்த்தைகளை கவனத்திற் கொள்வோம்:
• உபாதத் பின் ஸாமித் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்:எவர்கள் பெரியவர்களை மதிக்கவில்லையோ, எமது சிறார்கள் மீது அன்பு காட்வில்லையோ மேலும் எமது உலமாக்களின் உரிமைகளை (அந்தஸ்தை) அறியவில்லையோ அவர்கள் எம்மைச்சார்தவர்கள் அல்லர் என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் (அஹ்மத், திர்மிதி)
• அல்லாமா அல்-ஹாபிழ் இப்னு அஸாகிர் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எவர்கள் ஆலிம்களுடைய குறைகள் பற்றி கதைப்பார்களோ, அவர்களை அவர்கடைய மரணத்திற்கு முன்பு இதயத்தை மரணிக்கச் செவ்வது கொண்டு அல்லாஹ் சோதிப்பான். (அதாவது நல்லது கெட்டது அவருக்கு தெரியாமல் போய் விடும்) (அல்-தப்யீன்)
• மேலும் அவர்கள் கூறுகையில்: உலமாக்களுடைய மாமிசம் (அவர்கள் பற்றி குறை கூறுவது) நஞ்சாகும். எவர்கள் அதனை நுகர்வார்களோ நோயாளியாகி விடுவர், எவர்கள் அதனை சாப்பிட்டார்களோ அவர்கள் மரணித்து விடுவார்கள். (அல்-தப்யீன்)
• இமாம் அஹ்மத் பின் அல்-அத்ரயீ அவர்கள் கூறுகிறார்கள்: ஆலிம்கள் பற்றி குறை கூறுவது, குறிப்பாக அவர்களில் முதியவர்கள் பற்றிக் கதைப்பது பெரும் பாவங்களில் நின்றும் உள்ளதாகும். (அல்-ரத்துல் வாபிர்)
இவைகளை உவமைக்காகவே சுட்டிக்காட்டினேன். நாவிருக்கிறது என்பதற்காக நாம் பேசிவிடலாகாது. அத்துடன் இது முஃப்தி அவர்களுக்காக மட்டும் எழுதப்பட்டதல்ல. எங்களுடைய மஸ்ஜித் இமாம் அது போன்று எம்மைச் சூழவுள்ள உலமாக்கள் எல்லோரையும் மதிக்கக் கற்றுக்கொள்வோம். அவர்கள் ஏதாவது தவறு செய்யுமிடத்து முறையாக அவர்களிடத்தில் அதனை அவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு சுட்டிக்காட்டுவோம். எப்பொழுது நாம் உலமாக்களைப் பகைத்துக் கொள்வோமோ அப்பொழுது தான் நாம் பொது பல சேனாவின் திட்டங்களை நிறைவேற்றியவர்களாக ஆகிவிடுவோம். மட்டுமின்றி தாத்தாரிகளின் அழிவும் உலமாக்களை அவமதித்ததனாலேயே ஏற்பட்டது என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும்.
இறுதியாக.... எனது கடமை என்ற வகையில் இவைகளை நான் தொட்டுக் காட்டினேன். பொதுமக்கள் அவைகளை அறிந்து செயற்பட வேண்டும்.இல்லையேல் நாம் செய்யும் நல்லமல்கள் வீணாகி விடும் என்பதில் ஐயமில்லை. நிச்சயம் இதனையும் விமர்சிப்பவர்கள் இருப்பார்கள். அல்லாஹ்வே போதுமானவன். “அல்லாஹ்வையேயன்றி வேறு எவரையும் நாம் தூய்மைப்படுத்த மாட்டோம்” அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
0 comments
Write Down Your Responses