எமக்குத் தேவை இணக்கமா எதிர்ப்பா!
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம் தீராத கோபம் யாருக்கு லாபம் என்ற சினிமாப் பாடல் வரிகள் நமக்குத் தெரியும். கோபத்தையும் பகையையும் மறக்க முடியாமலிருப்பதும் நம் துன்பங்களுக்குக் காரணம் என்பது இன்று பலருக்கும் புரியாமலிருக்க முடியாது.
இந்த நாட்டில் ஏனைய சமூக மக்களுடன் சேர்ந்துதான் நமது வாழ்வு என்ற உண்மையை நேர்நோக்குவதற்கு நாம் மறுக்கிறோம். இதற்கெதிரான பகை வளர்க்கும் கோபமூட்டல்களைச் செய்வோருக்கு நாம் எளிதில் இரையாகிவிடுகிறோம். அதுதான் நம்மை மீளவிடாமல் துன்பச் சகதிக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது என்ற யதார்த்தத்தை யோசிப்பதேயில்லை.
ஏனைய சமூகங்களுடன்பேசி இணங்கவைத்துத்தான் நமக்கான தீர்வைப் பெறமுடியும் என்ற உண்மைக்கு ஒளித்து ஒளித்து எவ்வளவு காலம் வெற்று வீரவசனங்களின் பின்னால் போய்க் கொண்டிருக்கப் போகிறோம்? நமது வாழ்க்கையை நிர்மாணித்துக் கொள்வதற்காக கோபத்தை விடத் தெரியவில்லை என்பது தானே நமது பிரச்சினை.
இன்னல்களை ஏற்படுத்திவிடும் கோபத்தின் கெடுதித் தன்மை உணர்ந்தே பெரியோர் பலரும் கோபம் தவிர்! கோபம் தவிர்! என்று சொல்கிறார்கள். பாரதியும் அதைப் பழகு என்றுதான் சொல்கிறான். சீறுவதல்ல, ஆறுவதே சினம் என்றிருக்கிறாள் ஒளவையும்.
மனிதத்துக்கே விரோதியான இந்தக் கோபம் பற்றி மேலை நாடுகளிலும் ஆய்வுகள் செய்து கவலைப்படுகிறார்கள். வரவர கோபப்படுவது அதிகரித்து வருவதிலுள்ள தீமைகளையும் காரணங்களையும் காண்கிறார்கள். இங்கிலாந்தில் செய்யப்பட்ட ஆய்வில், இன்றைய மனிதர்களுக்கு சராசரியாக தினம் ஒரு தடவையாவது பயங்கர கோபம் வருகிறது. 60 சதவீதம் பேர் அற்பவிஷயத்துக்காக கொந்தளிக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.
பணத் தட்டுப்பாடு, தூக்கம் குறைவு, பசி, செல்போனில் தொந்தரவு, அடுத்தவரின் முரட்டுத்தனம் ஆகியவற்றை அந்த நாட்டு மக்களின் கோபத்துக்கு காரணங்களாகச் சொல்கிறார்கள். கோபம் தலைக்கேறி தன்னிலை மறப்பது, கொட்டும் வார்த்தைகளால் அடுத்தவர் கண்ணீர் விடவைப்பது, உறவை நட்பை இழப்பது போன்ற சம்பவங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிறதாம். இது மொத்த சமூகத்தையும் பாதிக்கும் ஆபத்து என்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏனைய நாடுகளிலும் இன்றைய மக்களின் கோபத்துக்குக் குறைவில்லை. கோபம் முற்றிய நிலையில் கொலைகளும் நடக்கின்றன. அன்றாட வாழ்க்கை அந்த அளவுக்கு கடினமானதாக, தொல்லைகள் நிறைந்ததாக, ஒழுங்குபடுத்த முடியாததாக மாறி விட்டது. யோசித்துப் பார்த்தால் எல்லா வகையான கோபத்துக்கும் காரணம் எதிர்பார்த்தது நடக்காமல் போவதுதான் என்பது புரியும். எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டால் ஏமாற்றம் ஏற்படாது.
அதுவே மகிழ்ச்சியான வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் மக்களைக் காக்கின்ற வகையில் கோபத்தை ஆற்றுவதும், பிரச்சினை தீர புத்திசாலித்தனத்தைப் பிரயோகிப்பதும்தான் சமூக அக்கறை உள்ளவர்களின் எண்ணமாக இருக்கும். இத்தனை ஆண்டுகால மனித அறிவு வளர்ச்சியில், இந்த நிலையை வந்தடைய முடியாதவர்கள் வெறும் விவேகமற்றுப் பொங்கும் ரோசங்களுடன் ஆதிமனித அழிவுகளை நிகழ்த்திக் கொண்டிருப்பவர்களாகவே இருப்பர்.
பகைமறப்பதும், பிரச்சினை தீர இணக்க வழியைப் பயன்படுத்துவதும் கௌரவக் குறைச்சலல்ல. வெகுமக்களின் நலனை உத்தேசிப்பவர்கள், வீறாப்பு வசனங்கள் பேசி அவர்களது வாழ்க்கையைத் தோற்கடித்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.
0 comments
Write Down Your Responses