இலங்கை வல்லரசு நாடுகளை எதிர்த்தால் என்ன நடக்கும் !
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்குலக நாடுகள் நேட்டோ என்ற பெயரிலான கூட்டணி அமைத்துக்கொண்டு ஏனைய சிறு சிறு நாடுகளை எல்லாம் மிரட்டித் தான்தோன்றித்தனமாக நடந்து வருவது குறித்து உலகின் பெரும்பான்மையான நாடுகளுக்கு அதிருப்தியும் பொருமலும் உண்டு. இவ்வாறு முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், வல்லரசு, எதேச்சாதிகாரம் என்றெல்லாம் அறிஞர்களும் முற்போக்காளர்களும் காலங்காலமாகக் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். சில நாடுகளின் தலைவர்களே துணிச்சலாகவும் முழு அக்கறையுடனும் இந்த வல்லரசு நாடுகளை எதிர்ப்பதில் உலக நாயகர்களாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சமீப காலத்தில் அமெரிக்காவுக்குத் துணிச்சலாக எதிர்வினை யாற்றிய சதாம் ஹூசைனும் முஅம்மர் கடாபியும் அழிக்கப்பட்டார்கள். இன்று அத்தகைய எதிர்வினையாற்றிக் கொண்டிருப்பவர்களில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் ஈரானின் அஹமதி நெஜாத். இன்னொருவர் வெனிசூலாவின் ஹியூகோ சாவேஸ்.
சைமன் பொலிவர், சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ போன்ற போராளிகளின் வழியில் அசாத்திய துணிச்சலைக் காட்டுபவர் சாவேஸ். பலரால் புரட்சியாளராகவும் பார்க்கப்படுகிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா. பொதுச்சபையில் பல நாட்டுப் பிரதிநிதிகள் கூடியிருந்தபோது, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷை சாத்தான் என்று திட்டினார். சாவேஸ் அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. இது தொடர்பாக பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தபோதும், தனது பேச்சில் இருந்து பின்வாங்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ மறுத்துவிட்டார்.
அமைதியாக இருக்கும் நாடுகளில் கலகத்தை உருவாக்கி, குண்டுகளை வீசும் ஆளை எப்படி அழைப்பீர்கள்? என்று திருப்பிக் கேட்டார். கொடுங்கோலன், போதைப் பொருள் கடத்துபவன் என்றெல்லாம் புஷ் என்னை வசை பாடியபோது உங்கள் அக்கறை எங்கேயிருந்தது? என்று சாதுரியமாக வாதிட்டார். இப்படிப் பேசுவதும் நடந்து கொள்வதும்தான் சாவேஸின் குணம்.
அதுபோலவே ஈரான் ஜனாதிபதி அஹமதி நெஜாத்தும் வல்லரசுகளை எதிர்ப்பதில் பின்வாங்காதவராக இருக்கிறார். மேலைநாடுகள் இரட்டை நாக்குகள் கொண்டவை. அணு ஆயுதங்களை அவர்கள் வைத்துக்கொள்ளலாம்; ஆனால், நாம் (ஈரான்) வைத்துக்கொள்ளக்கூடாது என்கிறார்கள் என்று பேசுவது மட்டுமில்லை, யுரேனியம் செறிவூட்டுவதை நிறுத்தாது தொடர்கிறார்.
அணுஆயுதம் தயாரித்துவிட்டதாக ஈரான் சொல்லவில்லை என்றாலும், யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனை மும்மடங்கு உயர்த்தியுள்ளது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஈரான் மீது பொருளாதாரத் தடையை விதிப்பதன் மூலம் ஈரானின் அணுஆயுதத் தயாரிப்பு திட்டத்தை தாமதப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கின்றன. இந்தப் பொருளாதாரத் தடை ஈரானை ஒன்றும் செய்துவிடாது என்று ரஷ்யா கூறுகிறது. சீனாவும்தான்.
தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக ஈரான் மீது குற்றச்சாட்டை வைக்கிறது இஸ்ரேல். பதிலுக்கு நெஜாத், ஈரானிய அணுநிலைய ஆராய்ச்சியாளர் ஒருவர் பட்டப்பகலில் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை யாருமே கண்டிக்கவில்லையே, ஐக்கிய நாடுகள் சபை இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையே என்று திருப்பிக் கேட்கிறார்.
அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் ஏனைய நாடுகளைப் பயமுறுத்தி அடக்கி வெல்வதனை ஒருவித கையாலாகாத்தனத் தோடு பார்த்துக் கொண்டிருப்பவர்கள், இத்தகைய துணிச்சல்காரர்களை வரவேற்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களால்தான் உலகில் ஓரளவுக்கேனும் வல்லரசு நாடுகளுக்கு எதிரான சம நிலை நிலவுகிறது என்றும் கருதுகிறார்கள்.
ஆனால், சதாம் ஹூசைன், முஅம்மர் கடாபி பட்டியலில் ஹியூ கோ சாவேஸூம் அஹமதி நெஜாத்தும் சேர்ந்துவிடக்கூடாதே என்பதுதான் பெரும்பாலோர் அச்சம்.
0 comments
Write Down Your Responses