வீராவேசப் பேச்சுகளுக்கு கடைசியில் நடந்தது என்ன தமிழா? நீ மீண்டும் மீண்டும் ஏமாளியா?
இக்கட்டுரையை எழுதுவதன் நோக்கம் அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு வேண்டுகோளாகும். அதாவது இலங்கையில் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை சர்வதேசம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பதாகவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இலங்கையில் உள்ள தங்களின் உறவுகளை த.தே.கூ.க்கு வாக்களித்து தமிழ் மக்களின் பலத்தைக் கூட்டும்படி வற்புறுத்தும்படியும் கேட்டிருந்தார்கள்.
இதே த.தே.கூ இலங்கை சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளைக் கடந்து கொண்டிருக்கிற இன்று வரை தமிழரசு என்றும், சமஸ்டி என்றும், தமிழ் ஈழம் என்றும் வெவ்வேறு முகங்களில் தோன்றி மக்களை ஏமாற்றியுள்ளனர். இவர்களின் இப்படியான பல முகங்களை மக்கள் அறிவார்கள். எனவே மீண்டும் இவர்களின் ஏமாற்றுப் பேச்சுக்கு மக்களின் ஆதரவு இல்லை என்று தெரிந்தவுடன், புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவை நாடியுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக எமது நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் அனைவரும் அனுபவித்து வந்த நிம்மதியற்ற பயங்கரமான வாழ்க்கைக்கு 2009ஆம் ஆண்டுடன் முற்றுப்புள்ளி வைத்து, கொலைகளும் அழிவுகளும் இடப்பெயர்வுகளுமற்ற ஒரு வாழ்க்கை எமது மக்களுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதை நாம் மறைத்து நாடகமாட முடியாது.
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டு, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து. மனிதனைக் கடிப்பது போல, தனது இனத்தையே அழித்து பயங்கரவாதிகள் என்ற பட்டத்தைச் சுமந்தவர்களை, தமிழ் மக்களின் இரட்சகர்கள் என்றும், அவர்களால் தான் தமிழ் மக்களுடைய உரிமைகள் வென்றெடுக்கப்படும் என்றும், அரசியல் ஆய்வரங்குகள் செய்தவர்களும், 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் பலத்தைக் காட்டவும், தமிழ் ஈழத்திற்கான ஏகோபித்த குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யவும் த.தே.கூ.விற்கே தமிழ் மக்கள் எல்லோரும் ஏகோபித்து வாக்களிக்க வேண்டுமென்றும், அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் துரோகிகள் என்றும் மேடைகளில் வாய் கிழியக் கத்தி 22 கூட்டமைப்பு அங்கத்தவர்கள் பாராளுமன்றம் சென்றார்கள்.
இவர்களின் வீராவேசப் பேச்சுகளுக்கு கடைசியில் நடந்தது என்ன? மன்னாரில் இருந்து கிளிநொச்சி ஈறாக முள்ளிவாய்க்கால் வரை ஆட்டு மந்தைகள் போல் பச்சை மட்டைகளால் மக்கள் அடித்தத் துரத்திச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த பொழுதும், அதை மீறி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போக முற்பட்ட மக்களை நோக்கி புலி வீரர்களின் துப்பாக்கிகள் நீணட பொழுதும், இந்த 22 தமிழ் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவது புலிகளைப் பார்த்து “மக்களைத் துன்புறுத்தாதீர்கள், ஆயுதங்களைக் கீழே போட்டு பேச்சுவார்த்தைக்குப் போங்கள்” என்று சொன்னார்களா? இல்லையே? பதிலுக்குக் கடைசிவரை மக்களின் அழிவை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
துன்பத்துக்குள்ளான மக்கள் தங்களுடைய உயிர்களைக் காப்பாற்ற இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று, அகதி முகாம்களில் தங்கி, அடிப்படை வசதிகள் இன்றி சொல்லொணாக் கஸ்டங்களை அனுபவித்து, தற்பொழுது அரசாங்கத்தால் மீளக் குடியமர்த்தப்பட்டு ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்டடுக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களை, இனவாதம் பேசி அதே சேற்றில் மீண்டும் அமிழ்த்திவிட வந்துள்ளார்கள் த.தே.கூட்டமைப்பினர். எனவே மக்களே இவர்களையிட்டு விழிப்பாக இருங்கள்.
த.தே.கூட்டமைப்பினர் ஒவ்வொருவரின் பேச்சுகளிலும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு தங்களுக்கு உண்டென்றும், உலக நாடுகளின் ஆதரவு உண்டென்றும் கூறி வருகிறார்கள். புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் எல்லோரும் புலிகளுக்கோ அழிவுக்கோ ஆதரவானவர்கள் அல்ல. ஒரு சிறு கும்பலைத் தவிர ஏனையோர் புலிகளின் அடாவடித்தனங்களை அழிவுப்போக்கை எதிர்த்தவர்கள். இப்படியானவர்களை கூட்டமைப்பினர் “துரோகிகள்” என்று வாய் கூசாமல் சொன்னார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் துரோகிகள் எனத் தூற்றப்பட்டவர்கள் தான், அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொள்ளாமல் நின்று, இந்தக் கொடிய யுத்தத்தால் விலை மதிக்க முடியாத உயிர்களையும் உடமைகளையும் இழந்து தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு பல வகையான உதவிகளைச் செய்து கொடுத்ததுடன், இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குப் பல அபிவிருத்திப் பணிகளை அரசாங்கத்தின் உதவியுடன் செய்து வருகிறார்கள் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் கட்டாயமாக சிந்திக்க வேண்டும்.
தமிழ் தலைமைகள் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்றுவரை ஆட்சியிலிருந்த முற்போக்கான அரசுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் அல்ல. மாறாக ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஆதரவான ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவாகச் செயற்பட்டு வந்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழ் மக்கள் ஒரு சிறுபான்மை இனமென்றும், அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கலாமே தவிர உரிமைகள் கோரி போராடக்கூடாது என்றும், இனவாதத் திமிருடன் ஆணவமாகப் பேசிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை எங்களுடைய தமிழ் மக்களின் இரட்சகர்களான கூட்டமைப்பினர் ஆதரித்து மேடைகளில் முழங்கியதை மக்கள் மறந்துவிடவில்லை. அந்தத் தேர்தலில் சரத் பொன்சேகா வென்றிருந்தால் தமிழ் மக்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பது சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு தமிழனும் நன்கறிந்த விடயம். இது தமிழனுடைய அழிவில் சுகபோக வாழ்க்கை வாழ நினைக்கும் கூட்டமைப்பினருக்கு ஒன்றும் புதுமையல்ல.
1956இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க காலத்திலிருந்து, அவரது மனைவி சிறீமாவோ பண்டாரநாயக்க, மகள் சந்திரிகா குமாரதுங்க ஈறாக இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரை, தமிழ் மக்களுக்கான உரிமைகளை ஏதோ ஒரு விதத்தில் வழங்க முன்வந்தார்கள். இவர்களால் எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாவற்றிற்கும் பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் தமிழ் தலைமைகள் தடையாக இருந்ததுடன், ஐ.தே.கவுடன் சேர்ந்து குழப்பங்களை உண்டாக்கி தீர்வு நகல்களை கிழித்தெறிந்தும் எரித்தும் உள்ளார்கள்.
தற்பொழுதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஐ.தே.கவின் கூட்டாளிகள் தான். ஒரு சிறு உதாரணம். இந்த ஆண்டு ஐ.தே.க கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களால் யாழ்ப்பாணத்தில் நடாத்திய மேதின ஊர்வலத்திலும் கூட்டத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்துகொண்டு தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தினார்களே! அது ஒன்றே போதாதா, மக்கள் இவர்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்கு? பின்னர் அதற்கு மன்னிப்பும் கேட்டிருந்தார்கள்.
ஐ.தே.க மேதின ஊர்வலத்தில் ஐ.தே.க.வுடன் கொடியைப் பிடித்ததிற்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்டவர்கள், முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்களின் அழிவுக்குக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் என்ற வகையில் அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டார்களா? இல்லையே! ஏனெனில் அந்த அழிவை அவர்கள் எதிர்பார்த்தார்கள். மக்களின் அழிவை வெளிநாடுகளுக்குக் காண்பிப்பதின் மூலம் அரசியல்லாபம் பெறலாம் என நினைத்தார்கள். எனவேதான் அரசியலில் இவர்கள் செல்லாக்காசாகி விட்டார்கள்.
அடுத்த விடயம், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் சில உதிரிக் கட்சிகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா செல்லும் வேளைகளில் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்வதெல்லாம், அவர்கள் எமது நாட்டில் உள்ள தமிழ் மக்களின் மேல் உள்ள அனுதாபத்தினால் அல்ல. அவர்கள் ஒவ்வொருவரும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலிப் பினாமிகளிடமிருந்து வாங்குகின்ற பணத்திற்கு விசுவாசம் தெரிவிக்கவே அவ்வாறு செயல்படுகிறார்கள். இந்தப் பித்தலாட்டக்காரர்களின் செயல்களால் எமது நாட்டில் தற்பொழுது நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் கஸ்டங்களை அனுபவிக்கும் சூழ்நிலையே உருவாகும்.
இந்த தமிழின பிழைப்புவாதிகள் 25 இலட்சம் இலங்கைத் தமிழ் மக்களுக்குத் தமிழ் ஈழம் பெற்றுக் கொடுப்பதை விடுத்து, வேண்டுமானால் 6 கோடி தமிழ் மக்கள் வாழும் தமிழ்நாட்டில் ஒரு தனிநாடு அமைக்கப் போராடுவது வரவேற்கக்கூடியது. வேண்டுமானால் நாங்களும் உதவலாம். இந்த உதிரிக் கட்சிகளின் தலைவர்கள்தான் இலங்கையிலிருந்து செல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை விமான நிலையத்தில் வரவேற்பவர்கள். இந்த விடயம் குறித்து தமிழ் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொரு தமிழ் மகனும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய காலம் வந்துள்ளது.
அத்துடன் தமிழ் மக்களாகிய நாங்கள், கடந்த காலங்களில் இனரிதியாகப் பட்ட கஸ்டங்களைப் பார்க்கிலும், சமூக ரீதியான ஒடுக்குமுறைக் கஸ்டங்களையும் அனுபவித்துள்ளோம். இவைகள் எல்லாவற்றிற்குமாக களத்தில் நின்று போராடி அந்த மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தவர்கள் இடதுசாரிகளும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களும் தான். இன்று நம்மத்தியில் பலர் அனுபவிக்கும் உரிமைகள் இடதுசாரிகளின் போராட்டத்தால் கிடைத்த வெற்றிகளாகும்.
எனவே தமிழ் மக்களாகிய நாங்கள், இலங்கையர்கள் என்று பெருமையுடன் வாழ வேண்டுமானால், இனவாதம் பேசி மக்களை ஏமாற்றுபவர்களை துர்க்கி எறிந்துவிட்டு, இடதுசாரிகளையும், முற்போக்கு சிந்தனை கொண்டவர்களையும் ஆதரிப்பதின் மூலம், சகல மக்களுடனும் இணைந்து சுபீட்சமாக வாழலாம். இதுவே புலம்பெயர்நது கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முற்போக்கு சிந்தனையாளர்களின் கருத்தாகும். எனவே தமிழ் மக்களே சிந்தியுங்கள்!
எஸ்.வீரசிங்கம் (கனடா)
நன்றி. தினமுரசு
0 comments
Write Down Your Responses