உயர்கல்விக்காக சென்று நாடு திரும்பாத விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
உயர் கல்விக்காக வெளிநாடு சென்ற விரிவுரையாளர்களுள் 642 பேர் தமது ஒப்பந்தக் காலம் முடிவடைந்தும் இதுவரையில் நாடு திரும்பவில்லை என உயர் கல்வியமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் நவரட்ண தெரிவித்தார்.
இவ்வாறு உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்பாத விரிவுரையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென செயலாளர் கூறினார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுடனான ஒப்பந்த அடிப்படையில் கடந்த 15 வருடங்களுக்குள் விரிவுரையாளர்கள், முதுகலைமாணி மற்றும் தமது கலாநிதி பட்டங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அனுமதியுடனும், ஒப்பந்த அடிப்படையிலும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
இவ்வாறு சென்ற போதும் தமது கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் இவர்கள் தாய்நாட்டிற்கு திரும்பாது அந்தந்த நாடுகளிலேயே தங்கிவிடுகின்றனர்.
இதனால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு பாரிய நட்டத்தை எதிர்நோக்குவதுடன் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு எதிர்நோக்கும் நட்டத்தை ஈடுசெய்யும் வகையில் இவர்களுக்கெதிராக அவசியம் ஏற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
இது இவ்வாறிருக்க சம்பளக் கோரிக்கையை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 100 போராட்டம் ஒன்றை அண்மையில் நடாத்தியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments
Write Down Your Responses