முல்லைத் தீவில் வீசிய கடும் காற்றில் பறந்த தறப்பாள் குடிசைகள்!
முல்லைத்தீவு கடலோரப் பகுதிகளில் அண்மையில் மீளக்குடியமர்ந்த மக்களின் குடிசைகள் நேற்று பகல் வீசிய காற்றினால் தூக்கி வீசப்பட்டன.
தங்குவதற்கு பொதுக் கட்டடங்கள் கூட இல்லாத நிலையில் அந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இதேவேளை, கடலோரப் பகுதியில் சூறாவளி மற்றும் சுனாமி ஏற்படலாம் என இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட அறிவித்தலை அடுத்து இரவோடிரவாக மக்கள் இடம்பெயர்ந்து இரணைப்பாலை பற்றிமா தேவாலயம் மற்றும் இரணைப்பாலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை என்பவற்றில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
புதுமாத்தளன், பழையமாத்தளன், அம்பலவன்பொக்கணை ஆகிய கிராமங்களில் இருந்து நேற்று இரவு 9.30 மணிவரை 100 இற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து 3 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இரணைப்பாலைக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இந்தத் தகவலை இரணைப்பாலை பங்குத் தந்தை அருட்செல்வன் அடிகளார் உறுதிப்படுத்தினார். மக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு தாம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவளை முள்ளிவாய்க்கால் மேற்கில் இருந்து 25 வரையான குடும்பங்கள் இடம் யெர்ந்து முள்ளிவாய்க்கால் அ.த.க. பாடசாலையில் தஞ்சம் புகுந்துந்துள்ளன.
பலத்த காற்று மற்றும் மழை காரணமாக அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் தறப்பாள் கொட்டகைகள் பல தூக்கி வீசப்பட்ட நிலையிலேயே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
நேற்று பிற்பகல் 2 மணியிலிருந்து காற்று பலமாக வீசியதுடன் கடும் மழையும் பெய்துள்ளது. சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து வீசிய காற்றால் முள்ளிவாய்க்கால் அம்பலவன்பொக்கணை, புதுமாத்தளன், ஆனந்தபுரம், சிவநகர் போன்ற பகுதிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தறப்பாள் கொட்டகைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்த மக்கள் இல்லிட நெருக்கடிகளை எதிர்நோக்கி உள்ளனர். இதேவேளை அந்தப் பகுதிகளில் இடம்பெயர்ந்து தங்குவதற்கு பொது கட்டடங்கள் இல்லாத நிலையில் தொடர்ந்தும் அவர்கள் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி உள்ளது.
காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்தப் பகுதிகளில் மேலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய காற்றுடன் கூடிய மழை அவற்றின் சேதம் தொடர்பில் முல்லைத்தீவு அரச அதிபர் கூறுகையில், “நேற்றுப் பிற்பகலில் இருந்து பலத்த காற்றுடன் கூடிய மழை காலநிலை நிலவுகிறது. இதனால் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தி உள்ளோம்.
இதுவரைக்கும் மக்களுக்கு பலத்த சேதம் எதுவும் ஏற்பட்டதாக தரவுகள் இல்லை. காற்றுடன் மழை தொடர்வதால் சேத விவரம் குறித்து தற்போது கூறமுடியாது’ என்றார்.
முல்லைத்தீவு கடலுக்குக் கிழக்காக 100 கிலோ மீற்றர் தொலைவில் புயல் மையங்கொண்டு நகர்ந்து வருவதால் அது கரையை எட்டும்போது சூறாவளி ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments
Write Down Your Responses