வடிவேலுவின் ரசிகர்களைப்போல் செயற்படும் கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு புறப்படும்போது, ஐயா வெளிக்கிடுறார்... ஐயா வெளிக்கிடுறார் என்று தண்டோராப் போடாத குறையாக என்னமோ பெருஞ்சாதனை நிகழவிருப்பதாக எழுதித்தள்ளும் தமிழ் ஊடகங்கள், அவர்கள் திரும்பிவரும்போது, போய் என்ன சாதித்துவிட்டு வருகிறார்கள் என்பது பற்றி மூச்சு விடுவதில்லை.
இலங்கை அரசை ஒருகை பார்க்கப்போவதாக மன்மோகன்சிங் உறுதியளித்தார் என்றோ ஒபாமா கையிலடித்துச் சத்தியம் செய்தார் என்றோ ஒரு பொத்தாம் பொதுவான அறிவிப்பை விட்டால் முடிந்துவிடுகிறது அலுவல்.
இந்தியப் பிரதமரோ அமெரிக்க ஜனாதிபதியோ இந்த அறிவிப்புகளைக் கண்டுகொள்ள மாட்டார்கள் அதனால் இஷ்டத்திற்கு எதையாவது விளாசி மக்களைப் புல்லரிக்கவைத்துப் பிழைப்புப் போகிறது தலைவர்களுக்கு! அவர்களும் பெரியமனிதத் தோரணையோடு என்ன கதைத்தது என்பதை வெளியிடாமல்... இவர்களும் தேள்கடி வாங்கிய திருடர்கள்போல் பம்மியபடி திரும்பிவருகிறார்கள் என்றால், ஏதோ முறையாக டோஸ் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்று பழைய அனுபவங்களை வைத்து நாமாக ஊகித்துக் கொண்டுவிட வேண்டியதுதான்.
இத்தனை காலமாக இவர்களது திருட்டுத்தனங்களைப் பார்த்து வருகிறவர்களுக்கு, இவர்கள் வீரவசனங்களைச் சற்று நிறுத்திக் கமுக்கமாயிருக்கிறார்கள் என்றால் போன இடத்தில் ஏதோ கசப்பு மருந்தை விழுங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம்தானே! கூட்டமைப்பினருக்குக் கசப்பு மருந்து எதுவென்றால், யதார்த்தச் சூழலுக்கேற்பப் பேசுங்கள் என்ற அறிவுரைதான்.
கூட்டமைப்பினரின் நிலையை யோசித்துப் பாருங்கள். 13ஆவது திருத்தம் கால்தூசுக்கும் பெறுமதி இல்லை என்றே மக்களுக்கு அடித்துச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இப்போ, அதிலிருந்தே பேச்சை ஆரம்பியுங்கள் என்று சொன்னால் அவர்கள் என்னதான் செய்வார்கள்? தமிழ்மக்களை ஆவேசப்படுத்தத் தக்கதாய் அரசு ஏதாவது செய்யாதா என்று கமுக்கமாய்க் காத்திருக்கத்தானே வேணும்?
பதின்மூன்றாவது திருத்தத்தை இலங்கை அரசு வலுக்குறைப்புச் செய்வதை நிறுத்தச் சொல்லுங்கள் என்று அழுதுகொண்டே சென்றவர்களிடம் இந்தியாவேறென்ன சொல்லியிருக்கப் போகிறது? அங்கே அரசாங்கத் தரப்பில் உள்ளவர்களே கணிசமானோர் உறுதியாக நின்று வலுக்குறைப்பை நிறுத்தியிருக்கிறார்கள். போங்கள், தெரிவுக்குழுவிற்குப் போய் அவர்களுடன் இணைந்து பேசுங்கள். பேச்சை ஆரம்பியுங்கள். பதின்முன்றாவது திருத்தத்தை வலுவாக்கிக் கொள்ளலாம், போங்கள் என்று வழக்கம்போல இதமாகச் சொல்லியனுப்பியிருப்பார்கள்.
இவர்களும் வழக்கம்போல மீசை மண்ணைத் தடவி விட்டுக் கொண்டே, வலுக்குறைப்பைத் தடுத்து நிறுத்த மன்மோகன் சிங் உறுதி என்ற வெற்றி அறிவிப்பை அங்கிருந்தபடியே தங்கள் கட்சிப்பத்திரிகைக்குத் தெரிவித்துவிட்டு வந்திறங்கியிருக்கிறார்கள். இனி, வரும் செப்டெம்பர் தேர்தலுக்கு மேடைகளில், ஒற்று மையாக உங்கள் வாக்குப்பலத்தை நமக்கே தந்து காட்டினீர்கள் என்றால், தேர்தல் முடிந்த மறுநாள் மன்மோகன்சிங் வந்திறங்குவார். மகிந்தவின் காதை முறுக்கிக் காரியம் முடித்துத் தருவார்... ஒற்றுமை, அதுதான் முக்கியம். ஒற்றுமையை நீங்கள் காட்டாவிட்டால் தமிழினமே தொலைந்தது... என்று பயங்காட்டித் தமிழ்மக்களைப் பதைபதைக்க வைப்பார்கள்.
போன வருசம் கிழக்கு மாகாணத் தேர்தல் முடிந்தவுடன் வந்திறங்கப் போவதாகச் சொன்ன சர்வதேசம் இன்னும்தான் வரக்காணோமே என்று நமது மக்கள் யாரும் கேட்கப் போவதில்லை. அப்படியே கேட்டாலும், அது போன வருசம்... இது இந்த வருசம் என்பதை அவர்கள் சொல்லாமலே மக்கள் தாமாக புரிந்துகொண்டுவிடுவார்கள். வைகைப்புயல் வடிவேலுவின் ரசிகர்கள்தானே நாமெல்லோருமே!
0 comments
Write Down Your Responses