சாட்டி கடற்கரை பள்ளிவாசல் தாரைவார்க்கப்படுகின்றதென மக்கள் விசனம்! (படங்கள் இணைப்பு)
நிர்வாகத்தின் தன்னிச்சையான சில முடிவினால் வேலணை பிரதேச சபைக்கு பள்ளிவாசல் சூழல் ,வருமானம் ஆகியன தாரைவார்க்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். மாவட்டத்தில் வேலணை பிரதேசத்திற்குட்பட்ட பிரிவில் முஸ்லிம்கள் அதிகமாகசெல்லும் மண்கும்பான் வெள்ளக்கடற்கரை பள்ளிவாசல் இவ்வாறான நிலைமையினை எதிர்கொண்டுள்ளது.
யாழ் முஸ்லிம்கள் முதல் வெளிமாவட்ட முஸ்லிம்கள் தங்களது பொழுது போக்குக்கிற்கு தினசரி இப்பள்ளிவாசல் சார்ந்த கடற்கரை பிரதேசத்திற்கு வந்துசெல்வர்.
இன்று சுதந்திரமாக வெள்ளைக் கடற்கரை பிரதேசத்தில் முஸ்லிம்கள் நடமாட முடியாத வகையில் பள்ளிவாசல் நிர்வாகம் எடுத்த சில நடவடிக்கைகள் தடையாக உள்ளன.
பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் என தங்களை கூறிக்கொள்வோர் சிலர் வெளியூர்களில் இருந்தவிட்டு இவ்வாறான தேவையற்ற செயலில் ஈடுபட முயல்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த காலத்தில் இல்லாத சில கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் அங்கு வந்த முஸ்லிம் மக்கள் பலர் கருத்து தெரிவிக்கையில்:
‘பரம்பரை பரம்பரையாக பள்ளிவாசல் முன் உள்ள கடற்கரையிலே நீராடி வருகிறோம். இது எங்களுக்கு பாதுகாப்பான இடமாகும். இதில் வலைகளை வைத்துவிட்டு பள்ளிவாசல் புனிதம் பேணப்படவில்லை என நொண்டிச் சாட்டுகளை முன்வைத்து கட்டுப்பாடுகளை விதிப்பது தேவையற்ற விடயமாகும். எனவே இது சம்பந்தமாக பள்ளிவாசல் நிர்வாக சபை மக்களுடன் கலந்துரையாடி சிறந்த முடிவுகளை எடுக்கவேண்டும்’ என்றனர்.
இது குறித்து பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர் தெரிவிக்கையில்:
‘கட்டுப்பாடு கொண்டு வரக் காரணம் தற்போது பள்ளிவாசல் கடற்கரையை அண்டிய பகுதியில் போதையில் சிலர் நடமாடுகின்றனர். இவர்களால் எமது பள்ளிவாசலின் புனிதத்தன்மை இழக்கப்படுகிறது. மேலும் இங்கு முஸ்லிம் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் அந்த இடங்களில் நீராடுவதில்லை. இது தவிர ஒதுக்கப்பட்ட இடங்களில் நீராடாமல் தடைசெய்யப்பட்ட இடங்களில் நீராடுகின்றனர். இதனால் சீர்கேடுகள் இடம்பெற வாய்ப்புள்ளது. கடலில் மீனவர்களால் வைக்கப்பட்டுள்ள வலைகள் நீராடுபவர்களால் சேதமாக்கப்படுகின்றன. இதனால் தான் இந்நடவடிக்ககை எம்மால் எடுக்கப்பட்டது’ என்றார்.
இவ்வாறு கட்டுப்பாடுகளை விதிக்கின்ற இவர்கள் மக்களின் நலனில் கவனமெடுத்து பின்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மக்களின் அபிப்பிராயமாகும். இதுவிடயத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகள் கவனமெடுத்து ஆவன செய்வதுடன், மும்மொழிகளிலும் அதனை மேற்கொள்வது அவசியமாகும் என்பதையும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
(பாறூக் சிகான்)
0 comments
Write Down Your Responses