கழுதையைப்போல் மாறிக்கிடக்கும் கூட்டமைப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக காத்திருந்து களைத்துப் போன அரசாங்கம் கடைசியில் வேறுவழியின்றி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்துவிட்டது. தீர்வு குறித்து பேசுவதற்கான இந்தக்கடைசி வாய்ப்பையும் தட்டிக்கழிக்கிறது கூட்டமைப்புத் தலைமை. இந்த நாட்டின் அனைத்துத் தரப்புகளையும் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களுடன் நமது பிரச்சினைகளைச் சொல்லி ஆறு மாதத்துக்குள் தீர்வொன்றுக்கு வரக்கூடிய இந்தச்சந்தர்ப்பத்தையும் எதிர்த்து ஏதோ ஞாயங்கள் பேசிவிட்டு எப்படி எமது மக்களுக்கான தீர்வைக் காணப்போகிறது இந்தத் தலைமை?
அங்கெல்லாம் போய்ப் பேசித் தீர்வைக் கண்டுவிட முடியாது என்பதை பேசிப்பார்க்காமலே மறுபக்கம் திரும்பிநின்று தெரிவித் துக்கொண்டிருக்கும் மர்மமென்ன? இந்தியாவும் உலகநாடுகளும் வற்புறுத்துவதுபோல் இந்த தெரிவுக்குழுவில் போய்ப்பங்கேற்று, அங்கு தங்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வைக்கமுடியவில்லை என்பதைக் காட்டினால், அது தீர்வைப் பெறும் முயற்சிகளின் ஒரு படியாகத்தானே அமையும்? மாறாக, பங்குபற்றுவதால் என்ன குறைவு நமக்கு வந்துவிடப் போகிறது?
சரி, இலங்கை அரசுடனோ ஏனைய கட்சிகளுடனோ பேசாமல் எப்படித் தீர்வை எடுக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்? தமிழர்களின் தேவை என்ன என்பதற்கு தன்னாட்சி அலகு என்று ஒற்றை வார்த்தையில் பதிலைச் சொல்லிவிட்டு அலட்சியமாய்த் திரிவது போல, தீர்வு எப்படி வரும் என்பதற்கும் சர்வதேச அழுத்தம் என்ற ஒற்றை வார்த்தையைச் சொல்லிவிட்டு உலகச் சுற்றுலா போய்வருகிறார்கள்.
சொந்த புத்தியில் செயற்பட முடியாததால்தான் இவர்களால் சொந்தமாய் ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்க முடியாமலிருக்கிறது. புலம்பெயர்ந்தோர் என்ன சொல்வார்களோ, தமிழ்நாட்டுக்காரர் என்ன சொல்வார்களோ, அமெரிக்கா என்ன சொல்லும், இந்தியா எதையாவது சொல்லும் என்று காத்திருப்பதிலேயே இவர்களது அரசியல் முடிகிறது.
இந்தியா உட்பட வெளிநாட்டு சக்திகள் இலங்கை அரசை நோக்கி அந்தந்த நேரத்துக்கு தமக்கு வசதிப்பட்டபடி விடுக்கும் கோரிக்கைகளை ஏந்திக்கொண்டு, ஏதோ நடக்கும் என்பதுபோல தமிழ்மக்களுக்கு அரசியல் படங்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்காக ஒரு கதையைச் சொல்லலாம். ஒரு தெருவில், தந்தை கழுதை மேல் அமர்ந்துவர, மகன் அருகே நடந்துவரப் பயணம் போய்க்கொண்டிருந்தார்கள். எதிரே வந்த ஒருவன், இப்படிச் சிறுபையனை நடக்கவிட்டு நீ கழுதை மேல் போகிறாயே, சிறுவன் பாவமல்லவா? என்று கேட்டதும், தந்தை கீழே இறங்கிக்கொண்டு மகனைக் கழுதைமேல் ஏற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார்.
அடுத்து எதிர்ப்பட்ட ஒருவன், என்ன அநியாயம் இது! வயசானவர் நடந்துவரச் சின்னப்பையன் குஷாலாகக் கழுதைமேல் போகிறானே என்று சிரித்தான். அப்பா பார்த்தார். பையனைக் கீழே இறக்காமல் தானும் அவனோடு மேலே ஏறி அமர்ந்துகொண்டார். எதிரில் இன்னொருவன் வந்தான். உங்கள் ரெண்டு பேருக்கும் இரக்கமே இல்லையா? இரண்டு போர் பாரத்தைக் கழுதை தாங்குமா? என்று கேட்டுப் போனான்.
தந்தைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மகனையும் இறக்கி தானும் இறங்கிக்கொண்டு, கழுதை அருகே இருவரும் நடந்துபோனார்கள். பிரச்சினை இத்தோடு முடிந்துவிடவில்லை. மீண்டும் எதிரில் வந்த ஒருவன், உங்களுக்கென்ன பைத்தியமா? கழுதை சும்மாதானே வருகிறது, நீங்கள் இரு வரும் மடையர்களைப் போல நடந்துவருகிறீர்களே என்றான். வேறுவழியின்றிக் கழுதையைத் தூக்கிக்கொண்டு ஓடினார்களாம் தந்தையும் மகனும். நாமும் தீர்மானங்களுக்கு மற்றவர்களில் தங்கியிருந்தால் இப்படித்தான் ஆகும்.
0 comments
Write Down Your Responses