எதிர்ப்பு அரசியலும் இணக்க அரசியலும்! முருகபூபதி

சுமார் அரை நூற்றாண்டு காலத்துக்குள் தமிழகத்தில் திராவிட பாரம்பரிய அரசியலில் வந்தவர்களின் பொதுவாழ்வைப் பார்த்தபோது, “அரசியலில் எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை. எல்லாம் சகஜமப்பா…” என்று ஸ்ரீமான் பொதுஜனன் சொல்லுமளவுக்கு எத்தனையோ வேடிக்கைகள் கோமாளித்தனங்கள் நடந்துவிட்டன. தமிழகத்தின் சுவரொட்டிகளுக்கு வாய் இருந்தால் அந்த சுவாரஸ்யங்களைப் பேசும்.

அண்மைய சிறு உதாரணம்:-

சிறிது காலத்துக்கு முன்னர் ‘அண்ணன் ராமதாஸ்’ என்று புகழாரம் சூட்டி அவரிடமிருந்து மலர்ச்செண்டு பெற்று கூட்டணி அமைத்துக்கொள்ள முயன்ற தமிழக முதல்வர் அம்மா, தற்போது ராமதாஸின் பா.ம.க. வை இரும்புக்கரம் கொண்டு அடக்கமுற்பட்டிருக்கிறார். அந்தக் கட்சியின் தொண்டர்கள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதனால் அந்தக்கட்சியை தடைசெய்யவும் தயங்கமாட்டேன் என்று சட்டசபையில் சூளுரைக்கின்றார். ஏற்கனவே தமது சாதி அரசியலுக்காக வன்னியர் சங்கம் உருவாக்கி போராட்டங்களின்போது நடுவீதியில் மரங்களை வெட்டிவீழ்த்தி பொதுமக்களுக்கு இடையூறுசெய்தவரின் இயக்கம்தான் பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) யாக மாறியது. மக்களின் சொத்துக்களையும் இயற்கையையும் அழித்த அந்தத் தலைவருடன்தான் காலப்போக்கில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் மட்டுமன்றி அகில இந்திய காங்கிரசும் கூட்டணி அமைத்தனர்.

இந்தக் கூத்து அணி அரசியலில் நீடிப்பது சந்தர்ப்பவாதம்.

பதவிகளுக்காக ஆட்சி அதிகாரங்களுக்காக குறுகிய காலத்தில் இப்படி இணக்க அரசியலையும் எதிர்ப்பு அரசியலையும் சமரச சந்தர்ப்பவாத அரசியலையும் மேற்கொள்பவர்களை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இதுகுறித்து தமிழகத்தில் எந்தவொரு இலக்கியப்படைப்பாளியும் ஏடுகளில் வாய் திறப்பதில்லை. தத்தமக்குள் பேசிக்கொள்வதுடன் அமைதியடைந்து விடுகிறார்கள். தமிழகத்திலிருந்துகொண்டு இலங்கையின் எதிர்ப்பு அரசியலும் இணக்க அரசியலும் பற்றி விவாதிப்பவர்கள் ஒரு தடவையாதல் இலங்கை வந்து நிலைமைகளை நேரில் பார்த்தால் தமிழக - இலங்கை இலக்கிய புரிந்துணர்வை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க முடியும்.

புலிகளை விமர்சித்தால் அது இலங்கை அரசுக்கு சாதகமாகிவிடும் என்றுதான் இன்னமும் பல தமிழக இலக்கியவாதிகளும் இதழாசிரியர்களும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். சிங்கள மக்களுடன் இணங்கி வாழ விரும்புபவர்களை இலங்கை அரசுடன் இணங்கியிருப்பவர்கள் என்றும் நினைக்கிறார்கள்.

மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணாத்துரையின் சமாதி அமைந்துள்ள அவரது நினைவில்லத்தில் தமிழகத்தில் இரண்டு மொழிகளுக்குத்தான் அனுமதி. அவை தமிழும் ஆங்கிலமும். ஹிந்திக்கு இங்கு இடமே இல்லை என்று எழுதப்பட்டிருக்கிறது. தமிழக திராவிட இயக்கங்கள் ஹிந்தி மொழியை வெறுத்ததுபோன்று இலங்கையில் போருக்குப்பின்னர் சிங்கள மொழியையும் சிங்கள மக்களையும் வெறித்தனமாக வெறுக்கும் போக்கே அதிகரித்துள்ளது. அதன் எதிரொலிகளை கடந்த காலங்களில் பார்த்தோம்.

அப்பொழுதும் தமிழக இலக்கியவாதிகளும் இலக்கிய விமர்சகர்களும் வாயே திறவாமல் மௌனம் காத்தனர்.

அவுஸ்திரேலியாவில் நான் முன்னர் வசித்த ஹியூம் பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 120 மொழிகள் பேசும் இனத்தவர்கள் வாழ்வதாக அந்தப் பிரதேச மாநகர சபைக்குத் தெரிவான இலங்கை சிங்கள இனத்தவரான சந்திரா பமுனுசிங்க என்னிடம் ஒரு தகவல் சொன்னார். அவர் அந்த அனைத்து மொழிபேசுபவர்களின் பிரதிநிதியாக சமூகப்பணியாற்றுகிறார்.

ஆனால், சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாடியவரின் இன்றைய வாரிசுகள், சிங்களம் என்றாலே அது தீண்டத்தகாத மொழி என்பதுபோலவும் அந்த இனத்தவர்கள் அனைவருமே வெறியர்கள் என்பதுபோலவும் சிந்திக்கின்றார்கள்.

இலங்கையில் நடந்த போரில் குற்றங்கள் மலிந்திருந்தமையால் அந்தப்போரை வெற்றிகொண்ட அரசின் மீது வெறுப்படைந்துள்ளவர்கள், இலங்கையில் இன நல்லிணக்கம் பேசுபவர்கள் மீதும் வெறுப்புக்கொள்கின்றனர். தொடர்ந்தும் எதிர்ப்பு அரசியல் பேசுபவர்கள்தான் தமிழினத்தின் காவலர்கள் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர். அதன் எதிரொலிதான் தமிழக படைப்பாளிகளின் விமர்சகர்களின் தற்காலச்சிந்தனை.

“இலங்கை மக்கள் அனைவரும் (சிங்களவர், தமிழர், இஸ்லாமியர்) தத்தம் உரிமைகளுடன் புரிந்துணர்வுடன் இணங்கிவாழ்ந்தால் மட்டுமே இலங்கைக்கு நல்லதொரு எதிர்காலம் அமையும். அதனைவிடுத்து இனத்துவேஷத்தை வளர்த்து எதிர்ப்பு அரசியல் நடத்தினால் அது தங்களைத் தாங்களே தகனமாக்கிக்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளிவிடும்” என்று சிந்திப்பவர்களை இப்போதும் துரோகிகளாகச் சித்தரிக்கப் பார்க்கிறார்கள். அப்படிச் சித்தரிப்பவர்களுக்கு ஒரு அறைகூவலைத்தான் எம்மால் விடுக்கமுடியும்.

“ஒரு தடவையாதல் இலங்கை வந்து பார்த்துவிட்டு பேசுங்கள், எழுதுங்கள், விவாதியுங்கள்.”

கிளிநொச்சியை அரச படைகள் கைப்பற்றியபோது விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்காலுக்கு பின்வாங்கினார்கள். கள நிலவரம் தெரிந்துகொண்டு அவர்கள் பின்வாங்கினார்கள். அப்பொழுது தமிழக திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து என்ன எழுதினார் தெரியுமா?

“கிளி வீழ்ந்தாலும்…புலி வீழாது…”

இப்படி எதுகைமோனையுடன் எழுதிய இந்த புகழ்பெற்ற தமிழக கவிஞர் கனடாவுக்கு எம்மவரின் டொலரில் பிஸினஸ் கிளாஸ் விமான டிக்கட்டில் சென்று மேடையேறி, “தமிழ் ஈழ மக்கள் எனக்கு அனுமதி தந்தால் தமிழ்ஈழ தேசிய கீதம் இயற்றித் தருவேன்.” என்று பலத்த கரகோஷத்துடன் பேசினார்.

இந்தத் தகவல்கள் இலங்கையில் இணக்க அரசியல் பேசுபவர்கள் தொடர்பாக தமிழகத்திலிருந்து கொண்டு விமர்சிப்பவர்களுக்கு பதச்சோறு.

வைரமுத்துவின் அந்த வைர(?) வரிகளை பார்த்துவிட்டு, புலம்பெயர்ந்து கனடாவில் வதியும் ஒரு ஈழத்து படைப்பாளி சொன்னார்: “ஏற்கனவே தமிழ் ஈழ தேசிய கீதம் எழுதுவதற்கு அங்கே புலிகளின் இரண்டு ஆஸ்தான கவிஞர்கள் (காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை) போட்டிபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த இலட்சணத்தில் வைரமுத்துவும் வருகிறாரா?”

இப்படித்தான் தமிழக படைப்பாளிகள் பலர் இலங்கையின் யதார்த்தம் புரியாமல் அல்லது தெரிந்துகொள்ள முயற்சிக்காமல் உணர்ச்சி…எழுச்சி…என்று தமிழக அரசியல் கொழுந்துகளின் நீரோட்டத்தில் கலந்து கரைந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள்.

போரினால் கொல்லப்பட்ட மக்களை நினைத்து கவிதையும் கட்டுரையும் எழுதினால் எதிர்ப்பு அரசியலில் கலந்துவிடலாம். அதற்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று நம்புகிறார்கள்.

பல உணர்ச்சிக்கவிஞர்களும் தமிழுணர்ச்சி பேச்சாளர்களும் முள்ளிவாய்க்கால் பக்கமே எட்டியும் பார்க்காமல் தங்கள் கவியரங்கு கவிதைகளிலும் மேடைகளிலும் தவறாமல் குறிப்பிடும் சொல் ‘முள்ளிவாய்க்கால்’.

போர் முடிவுக்கு வந்து இந்த ஆண்டு மே மாதத்துடன் நான்கு ஆண்டுகளாகிவிட்டன. இந்த நான்காண்டு காலத்துக்குள் இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்களில் எத்தனையோ மாற்றங்கள் நடந்துவிட்டன. போரில் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபடுபவர்கள் எதிர்ப்பு அரசியல் பேசிக்கொண்டிருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதனால் என்ன பலன்? என்ன பயன்?

எதிரி பலமாக இருந்தால், எதிரியுடன் பேசித்தான் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும் தேவைகளையும் வென்றெடுக்கமுடியும் என்ற பாலபாட அறிவே அற்றவர்கள்தான் இணக்க அரசியல் குறித்து சிந்தித்து ஆக்கபூர்வமாக செயல்படுபவர்களை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எமது தமிழ்ச்சமூகம் வெளிப்படையான விவாதங்களுக்கு தயாராகாமல் மூடிய சமூகமாகவே வாழப்பழகிவிட்டது என்று ஒரு சந்தர்ப்பத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பி பதிவுசெய்துள்ளார்.

பல எழுத்தாளர் விழாக்களிலும் இலக்கிய சந்திப்புகளிலும் மாநாடுகளிலும் நான்கு தசாப்தகாலமாக தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்துள்ள அனுபவத்தில் பிந்திய நான்காண்டு காலத்தில்தான் எமது படைப்பாளிகள், விமர்சகர்கள், இதழாசிரியர்கள், ஊடகவியலாளர்களிடம் மலிந்துபோயுள்ள பகிரங்க விவாதத்துக்கு தயாரில்லாத மூடிய நபுஞ்சக குணாம்சத்தை அவதானிக்க முடிந்துள்ளது.

இலங்கையில் இலக்கிய மாநாடுகள் நடப்பதனால் இலங்கை அரசுக்கு பேராதரவு கிட்டிவிடும். இலங்கை அரசு போர்க்குற்றத்திலிருந்து தப்பிவிடும் என்றும் பேசுபவர்களும் எழுதுபவர்களும், தமிழகத்தில் திரையிடப்படும் அதேவேளையில் ஒரு மசாலாப்படம் இலங்கையிலும் திரையரங்குகளில் காட்சிக்கு வருவதை மறந்துவிடுகிறார்கள்.

போருக்குப்பின்னர் இலங்கையில் எத்தனையோ மாற்றங்கள் முன்னேற்றங்கள் நடக்கின்றன. ஆனால் அதனை ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்கள் நேரில்வந்து பார்க்கத் தயங்குபவர்கள், தத்தமக்குள் பொசுங்கிப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

வடக்கிலும் தெற்கிலும் மட்டுமல்ல தமிழகத்திலும் வதியும் படைப்பாளிகளும் இலக்கியவாதிகளும் இதழாசிரியர்களும் வன்னி மக்களை இனியாவது சென்று பாருங்கள்.

தங்கள் இருப்பை வெளிப்படுத்தும் சாய்மனைக்கதிரை விமர்சனங்களை விடுத்து, எமது தாயகத்தின் தற்போதைய யதார்த்த நிலையை உலகுக்கு எடுத்துரையுங்கள். கேள்விச்செவியன் ஊரைக்கெடுத்தான் என்ற நிலைக்கு தாழ்ந்துவிடவேண்டாம்.

அரசுகளும் அதிகாரத் தலைமைகளும் மாறலாம். அத்தகைய ஜனநாயக உலகில்தான் நாம் வாழ்கின்றோம். அதனால் ஒரு தேசத்தின் இனங்களுடன் இணங்கி வாழ்வதனால் எந்தத் தவறும் இல்லை.

நன்றி தேனி

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News