இலங்கைக்கெதிரான அமெரிக்கப் பிரேரணை வெற்றி பெற்றது! (இரண்டாம் இணைப்பு )

ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்த விவாதம் ஆரம்பமாகியுள்ளது. இக்கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்று ஒருசில நிமிடங்களுக்கு முன் வெற்றிபெற்றது.

அமெரிக்கா முன்வைத்த இலங்கைக்குஎதிரான பிரேரணைக்கு ஆதரவாக 25 நாடுகளும், எதிராக 13 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை மாநாட்டின் 22வது அமர்வில் அமெரிக்கா முன்வைத்து நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:-

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரானவை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அத்துமீறல்கள் குறித்து சுதந்திரமான நம்பகமான சர்வதேச விசாரணை வேண்டுமென்ற உயர் ஆணையரின் கோரிக்கையை இலங்கை மீதான தீர்மானம் கவனத்தில் கொண்டுள்ளதாக அமெரிக்கத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது நாட்டின் ஒட்டுமொத்த மக்கட்தொகையும் அனைத்து மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் முழுமையாக அனுபவிப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஒவ்வோர் அரசுக்கும் உண்டு என்பதை மறுவுறுதி செய்தல்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் தாங்கள் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும் சர்வதேசச் சட்டத்துக்கு இயைந்ததாக, குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம், இவற்றில் எது பொருத்தமானதோ அதற்கு இயைந்ததாக இருக்க வேண்டியதை அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் நினைவு கூர்ந்துள்ளது.

வட மாகாணத்தில் மாகாண சபைக்கான தேர்தல்களை 2013 செப்டம்பரில் நடத்தப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளதை வரவேற்று, உட்கட்டமைப்பை மறுவுருவாக்கம் செய்தல், கண்ணிவெடிகளை அகற்றுதல், உள்நாட்டு அகதிகளில் பெரும்பாலோரை மீளக்குடியமர்த்தல் ஆகிய பணிகளில் இலங்கை அரசு பெற்றுள்ள முன்னேற்றத்தை வரவேற்று, அங்கீகரிக்கும் அதேவேளை, நீதி, நல்லிணக்கம் மற்றும் வாழ்வாதார மீட்பு ஆகிய பரப்புகளில் இன்னும் மிகுதியான பணி காத்திருக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டு, இந்த முயற்சிகளில் பொதுச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மைப் பிரதிநிதிகள் உள்ளிட்ட உள்ளூர் மக்கட்தொகையினுடைய முழுமையான பங்கேற்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தல்.

இலங்கை அரசினுடைய படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையத்தின் அறிக்கை, அதன் விசாரணை முடிவுகள் மற்றும் பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு, இது இலங்கையில் தேசிய நல்லிணக்கத்துக்கான வழிமுறைக்குப் பங்களிக்கும் சாத்தியம் உண்டு என்பதை ஏற்றுக்கொண்டு, படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான இலங்கை அரசின் தேசிய நடவடிக்கைத் திட்டத்தையும், அவ்வாணையத்தின் விசாரணை முடிவுகள் மற்றும் பரிந்துரைகளுக்கான மறுவினையாக அறிவித்துள்ள பொறுப்புறுதிகளையும் கவனத்தில் கொள்ளல்.

ஆணையத்தின் விசாரணை முடிவுகள் மற்றும் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் அனைத்தையும் இந்தத் தேசிய நடவடிக்கைத் திட்டம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பதைக் குறித்துக் கொள்ளல்.

சட்டவிரோதமான கொலைகள் மற்றும் கட்டாயத் தலைமறைவுகள் குறித்த பரவலான குற்றச்சாட்டுகளை நம்பகமான முறையில் புலன்விசாரணை செய்தல், இலங்கையின் வடக்குப் பிரதேசத்தை இராணுவ ஆதிக்கத்திலிருந்து விடுவித்தல், நிலத் தகராறுத் தீர்ப்புக்கான பாரபட்சமற்ற அமைப்பு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தல், காவல்வைப்புக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல், முன்பு சுதந்திரமாகச் செயற்பட்ட பொதுச் சமூக நிறுவனங்களை வலுப்படுத்தல், மாகாணங்களுக்கு அதிகார ஒப்படைப்பு குறித்து ஓர் அரசியல் தீர்வை எட்டுதல், கருத்துச் சுதந்திரத்துக்கு அனைவருக்கும் உள்ள உரிமையைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல், சட்டத்தின் ஆட்சி நிலவத் தேவையான சீர்திருத்தங்களைச் சட்டமாக்கல் ஆகியவற்றுக்கான தேவை உள்ளிட்ட ஆணையத்தின் அறிக்கையில் உள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை நினைவு கூர்ந்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான சட்டமீறல்கள் பற்றிய எளிதில் புறந்தள்ள முடியாத தீவிரமான குற்றச்சாட்டுகளை இந்த ஆணையத்தின் அறிக்கையும் தேசிய நடவடிக்கைத் திட்டமும் போதுமான அளவு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பதைக் கவலையோடு குறித்துக் கொள்ளல்.

கட்டாயத் தலைமறைவுகள், சட்டவிரோதமான கொலைகள், சித்திரவதை, கருத்துச் சுதந்திரம், சங்கம் அமைத்தல் மற்றும் அமைதியாகக் கூட்டம் நடத்துதல் ஆகியவற்றுக்கான உரிமைகள் குலைக்கப்படுதல், மனித உரிமைப் பாதுகாப்பாளர்கள், பொதுச் சமூக உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிரட்டல்கள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள், நீதிமன்றச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு உள்ள அச்சுறுத்தல்கள், மதம் அல்லது கோட்பாடு அடிப்படையிலான பாகுபாடு ஆகியவை உள்ளிட்ட இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் பற்றித் தொடர்ந்து வெளிவரும் செய்திகள் குறித்துக் கவலை தெரிவித்துக் கொள்ளல்.

நல்லிணக்கத்துக்கும், நாட்டு மக்கள்தொகையின் அனைத்து உறுப்பினர்களும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கும் இன்றியமையாத் தேவையான அரசியல் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட, இலங்கை அரசு வெளிப்படையாக அறிவித்துள்ள பொறுப்புறுதிகளை அந்த அரசுக்கு நினைவுறுத்தல்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தைச் சேர்ந்த தொழில்நுட்பத் தூதுக்குழுவின் பார்வையிடலுக்கு வசதி செய்து கொடுத்த இலங்கை அரசின் முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்து, உயர் ஆணையர் அலுவலகத்தோடு உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்கும்படி இலங்கை அரசை ஊக்குவித்தல்.

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரானவை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அத்துமீறல்கள் குறித்து சுதந்திரமான நம்பகமான சர்வதேச விசாரணை வேண்டுமென்ற உயர் ஆணையரின் கோரிக்கையைக் கவனத்திற்கொண்டு, இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பதில் சொல்லும் பொறுப்பை மேம்படுத்த அந்நாட்டு அரசுக்கு ஆலோசனையையும் தொழில்நுட்ப உதவியையும் வழங்குவது குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் அறிக்கையையும், அவ்வறிக்கையில் உள்ள பரிந்துரைகள் மற்றும் முடிவுகளையும், குறிப்பாக இடைக்கால நீதிக்குத் தேவையான இன்னும் அனைத்தளாவியதான, உள்ளிணைத்துக் கொண்டதான ஓர் அணுகுமுறையின் இன்றியமையாத அங்கமாக ஓர் உண்மை தேடும் அமைப்பு வழிமுறையை நிறுவுவது தொடர்பான பரிந்துரையையும் வரவேற்கிறது.

உயர் ஆணையர் அலுவலகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசை ஊக்குவிக்கிறது. மேலும், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான அத்துமீறல்கள் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான நம்பகமான விசாரணையை நடத்த வேண்டுமென்று இலங்கை அரசைக் கோருகிறது.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை பயன்விளையும் வகையில் நிறைவேற்றும்படியும், தனக்குள்ள பொருத்தப்பாடான சட்டப்பூர்வமான கடமைகளை நிறைவேற்றத் தேவையான கூடுதல் நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளும்படியும், இலங்கை மக்கள் அனைவருக்கும் நீதி, சமநிலை, பதில் சொல்லும் பொறுப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தத் தேவையான சுதந்திரமான நம்பகமான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான பொறுப்புறுதியை நிறைவேற்றும்படியும் இலங்கை அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை மீள வலியுறுத்துகிறது.

சிறப்பு நடைமுறைகளுக்கான உரிமையாணை பெற்றவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கும்படியும், அவர்களுக்கு அழைப்பு விடுத்தல் மற்றும் அணுகல் உரிமை வழங்குதல் உட்பட நிலுவையில் உள்ள அவர்களின் கோரிக்கைகளுக்கு முறைப்படி மறுவினையாற்றும்படியும் இலங்கை அரசை ஊக்குவிக்கிறது.

மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவியை, இலங்கை அரசோடு கலந்தாலோசித்து அதன் ஒப்புதலோடு வழங்க உயர் ஆணையர் அலுவலகம் மற்றும் சிறப்பு நடைமுறைகளுக்கான உரிமையாணை பெற்றவர்களை ஊக்குவிக்கிறது.

இப்போது முன்வைக்கப்படும் இந்தத் தீர்மானத்தின் செயற்படுத்தல் குறித்து தொடர்புடைய சிறப்பு நடைமுறைகளுக்கான உரிமையாணை பெற்றவர்களிடமிருந்து உள்ளீட்டைப் பெற்று, பொருத்தமான வகையில் நிகழ்நிலை குறித்த வாய்மொழி அறிக்கையை மனித உரிமைகள் குழுவுக்கு அதன் இருபத்து நான்காவது அமர்வில் வழங்கும்படியும், இருபத்து ஐந்தாவது அமர்வில் விவாதத்தைத் தொடர்ந்து ஒரு முழுமையான அறிக்கையை வழங்கும்படியும் உயர் ஆணையர் அலுவலகத்தைக் கேட்டுக் கொள்கிறது.

அமெரிக்கா முதலில் கொண்டுவந்த வரைபு பிரேரணையில் இருந்து நீக்கப்பட்ட வசனங்கள் வருமாறு:

வெளியிலிருந்து வரும் கண்காணிப்பாளர்கள் மற்றும் வல்லுனர்களுக்கு எந்தவகையான தங்கு தடைகளும் அற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும். எனும் வாக்கிய அமைப்பு முற்றிலும் நீக்கப்பட்டிருக்கிறது.

வெளியக விசாரணை என்பது உள்ளக விசாரணை என மாற்றப்பட்டிருக்கிறது.

பொருத்தமான சர்வதேச விசாரணை எனும் வாக்கியம் முழுமையாக நீக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை அரசை வலியுறுத்துகிறோம் எனும் சொல் ஊக்கப்படுத்துகிறோம் என மாற்றப்பட்டிருக்கிறது.

தேர்தல்கள் நடத்தப்பட்டது, அடிக்கட்டுமானங்களை நிர்மாணித்திருப்பது இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தியிருப்பது போன்றவற்றை இலங்கை அரசு முன்னெடுத்திருப்பனை நாம் அங்கீகரித்து வரவேற்கிறோம் எனும் பாரா முதல் வரைவில் இல்லை. புதிதாக வெளியான நான்காவது வரைவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.


(செய்திகள் இதனோடு இன்னும் பதிவேற்றப்படும். இலங்கைநெற்றொடு இணைந்துகொள்க...) (கேஎப்)

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News